ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினியும், முருகனும் உறவினர்களிடம் பேசுவதற்கு அனுமதி மறுப்பதேன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடனும் பேச அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே முருகனின் தந்தை காலமானபோது, அவரது உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது, மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசின் சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. இந்தியாவுக்குள் உறவினர்களிடம் பேச அனுமதிக்கப்படும். மேலும் இது, மத்திய வெளிவிவகாரத்துறை சம்பந்தபட்டது என்பதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இந்தியாவுக்குள் உறவினர்கள், நண்பளுடன் பேச அனுமதிக்கத் தயார் எனவும், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், வெளிநாட்டில் லேண்ட் லைனில் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அவர்கள் வேறு மொழியில் பேசினால் எங்களால் தெரிந்துகொள்ள முடியாது எனவும் விளக்கமளித்தார்.
இதையடுத்து, நளினியும் முருகனும் தமிழர்கள்தானே? சட்டமன்றத்தில் ஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஏன் இந்த முரண்பாடு? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக நாளை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.