சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆயக்கர் பவன் செயல்பட்டு வருகிறது. அங்கு மூத்த வரி விதிப்பு அதிகாரியாக பணியாற்றி வருபவர் அண்ணா நகரைச் சேர்ந்த ரோக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன். அதே அலுவலகத்தில் மணலியைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கணவனை இழந்து வாழ்ந்து வரும் அந்தப் பெண் கடந்த ஐந்து வருடங்களாக அங்கு பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி ரோக்ஸ் தனது அறையைத் தூய்மை செய்யும்படி அந்தப் பெண்ணை அழைத்துள்ளார். அப்பொழுது தூய்மை செய்யச் சென்ற அந்தப் பெண்ணிடம் ரோக்ஸ் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதால், அதிர்ந்த அப்பெண் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டார். அதன் பிறகு வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள மற்ற உயர் அதிகாரிகளிடம் அந்தப் பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தெரிவித்துள்ளார். ஆனால் அப்பெண்ணின் புகாரை அதிகாரிகள் கண்டுகொள்ளாததாகக் கூறப்படுகிறது. இதனைப் பெரிதுபடுத்தவேண்டாம் என அப்பெண்ணிடம் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரோக்ஸ் அந்தப் பெண்ணுக்கு ஃபோன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கடந்த 15ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின் மீட்கப்பட்ட அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்தப் பெண் நேற்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இந்தப் புகார் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ரோக்ஸ் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரோக்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். வருமானவரித்துறை அலுவலகத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.