தஞ்சாவூரில் நடந்து வரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெயராம் மஹால் தோழர் வெ.கோபால்சாமி நினைவரங்கில் மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் கலந்து கொண்டு "மனு இன்னும் சாகவில்லை" என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசியதாவது, "கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருட்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்திய வரலாற்றினை கங்கை நதிக்கரையில் இருந்தல்ல, வைகை நதிக்கரையின் கீழடியிலிருந்து தான் எழுதப்படும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் பணியாளர் தேர்வாணையம் தேர்வு முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. பொது அறிவு என ஒரு தாளை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ் பாடத்தை தேவையில்லை என நிறுத்தி வைத்துள்ளது.
இதனால் தமிழ் தெரிந்தவன் வேலைக்கு வரலாம் என்ற நிலை மாறி அனைத்து மாநிலத்தவரும் வேலைக்கு வரலாம் என்ற நிலை உருவாகி உள்ளது. தொழிலாளர்களில் இன, மொழி பேதம் நாம் பார்ப்பதில்லை என்றாலும் கூட, தமிழக வேலைவாய்ப்புகளில் நமக்கான உரிமை மறுக்கப்படுகிறது.
இன்று வங்கி, அஞ்சல், ரயில்வே உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் அதில் வெளி மாநிலத்தவர் பங்கு அதிகரித்து வருகிறது. குறைந்தபட்ச தமிழர்களுக்கு கூட வேலை இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.
நீட் தேர்வை எழுதச் சொன்னால் எந்த அமைச்சராவது தேருவார்களா...? கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டால், முதலமைச்சராவது தேருவாரா? தமிழக அமைச்சர்கள் சிலர் பேசுவதைக் கேட்க வேடிக்கையாக உள்ளது. இதனால் தானோ என்னவோ, ஜெயலலிதா இருந்தவரை யாரையும் பேச விடவில்லை...
மனுவைக் கண்டால் அவன் குரல்வளையைக் கடித்து துப்பி விடுவேன் என்றார் அம்பேத்கர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதையை தத்துவப் பாடமாக படிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளனர். மாணவர்களுக்கு பகவத்கீதையை சொல்லித் தர வேண்டிய அவசியம் என்ன? கல்வியில் மதத்தை புகுத்தும் செயலாகத்தான் பார்க்க வேண்டும். இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. கிருஷ்ணர் சொன்ன, 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது போல, படிப்பது உன் கடமை, பலனை எதிர்பார்க்காதே, வேலை கிடைக்காது எனச் சொல்லாமல் சொல்கிறார்களோ... என்னவோ?
ரயில்வே துறை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டு துறையை சீரழிக்கத் திட்டமிடுகின்றனர். அரசுப்பணிகள் அவுட் சோர்சிங் முறையில் விடப்படுகிறது. இனி வரும் காலங்களில் நமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கார்டு, ஒரே மொழி, ஒரே வரி என்கிறார்கள். இதெல்லாம் யாரை ஏமாற்றுவதற்காக?
இப்போது தேசம் போகும் போக்கைப் பார்த்தால், மகாத்மா காந்தியை காந்தியை சுட்டுக் கொன்ற, நாதுராம் கோட்சேவைக் கூட தேசத்தந்தை என்று சொல்லும் நிலை வரலாம். வரலாறுகள் திரித்து எழுதப்படுகிறது.
நமது கண் முன்னே காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதவாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள் வகுப்பறைகளுக்குச் சென்று 2 மாதங்களாகிறது.
இங்கே நம்முடைய குழந்தை சந்தோசமாக இருக்கும் போது காஷ்மீர் குழந்தைகள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதே என எண்ணி, எவன் கலங்குகிறானோ... அவனே நல்ல மனிதனாக, படித்த, பண்பான மனிதனாக இருக்க முடியும்.
சாதியை, மதத்தை தூக்கிப் பிடிப்பவர்களிடம் கேளுங்கள். ரத்தத்தில், உடலை எரித்த சாம்பலில் சாதியை கண்டு பிடிக்க முடியுமா. இல்லை குறைந்த பட்சம் மருத்துவமனை வார்டுகளில் பிறந்த, மாறிப்போன குழந்தைகளில் சாதியை கண்டறிய முடியுமா என.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், சாதியின் பெயரால் உள்ள சுடுகாடுகளுக்கு, அரசு நிதி உதவி அளிக்கக்கூடாது எனச் சொல்லி உள்ளது. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் எத்தனை காலத்திற்கு ரத்தம் சிந்துவது, பெண் குழந்தைகளை பலி கொடுப்பது.
இந்தி மொழியை வலிந்து திணிக்கின்றனர். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம். விரும்பினால் எவரும் இந்தி கற்றுக் கொள்ளட்டும். விரும்பாதவர் மீது ஏன் திணிக்க வேண்டும்.
மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளும் போது, தமிழகம் ஏன் எதிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு நம்முடைய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெளிவாக சொல்லி விட்டார். நாங்கள் தமிழ் என்னும் பயிரை நன்றாக விளைவித்து வைத்துள்ளோம். இந்தி என்னும் மாடு எங்கள் வயலில் புகுந்தால், விவசாயி எப்படி விரட்டி அடிப்பானோ, அதைத்தான் நாங்களும் செய்கிறோம் என்றார்.
பெண்களை மனுதர்மம் எவ்வளவு இழிவு படுத்துகிறது. ஆடிட்டர் குருமூர்த்தி 30 சதவீதம் பெண்கள் தான் பெண்களாக உள்ளனர் என்கிறார். மற்ற பெண்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்கிறார். நாம் கொதித்தெழ வேண்டாமா.
இன்னொருவர் ஊடகத்துறையில் உள்ள பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்கிறார். இவையெல்லாம் மனு இன்னும் சாகவில்லை என்பதைத் தான் சொல்கிறது. ஆணும், பெண்ணும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்தாலும், பெண்கள் தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டிய நிலை. ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என எவரெல்லாம் நினைக்கிறார்களோ, அவர்களும் மனு தான்.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய கஸ்தூரிரங்கனும் மனுதான். பள்ளிக் குழந்தைகளை தரம் பிரிக்காதீர்கள். உயர்வு தாழ்வு பார்த்து ஒப்பிடாதீர்கள். புதிய கல்விக் கொள்கை நமது குழந்தைகளை சீரழிக்க நினைக்கிறது. சிறிது நேரம் படியுங்கள். தச்சு, உழவு, நெசவு, மண்பாண்டத் தொழிலை கற்றுக் கொள்ளுங்கள் என குலத் தொழிலை பார்க்கச் சொல்கிறது.
கீழடியில் கிடைத்த மண்பாண்டத்தின் சிதைவுகளில் கோதை என்ற பெண்ணின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, என்றால் என்ன அர்த்தம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய தமிழ் பெண்கள், மூதாதையர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்றல்லவா புரிகிறது.
ஹிந்தி, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் திணிக்கிறார்கள். சமஸ்கிருதம் தேவ பாஷை, தமிழ் நீச பாஷை என்றால் மனு இன்னமும் இருப்பதாகத் தானே அர்த்தம். சாதியை, மதத்தை, தீண்டாமையை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமிருந்து அதன் வேதனையை உணருங்கள்.
இன்று பல்வேறு வகைகளில் சாதியப் பாகுபாடுகள் உள்ளன. தீண்டாமை உள்ளது. கிராமங்களில், அலுவலகங்களில் என பல இடங்களில் தீண்டாமையை உணரமுடியும். இரட்டைக்குவளை முறை இல்லை எனச் சொல்ல முடியுமா. குடியரசுத் தலைவரையே கோயிலுக்குள் விட மறுக்கின்றார்கள் என்றால் தீண்டாமை எவ்வாறு உள்ளது என்பதை உணரமுடியும்.
அரசு ஊழியர்களே நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தீண்டாமையை ஒழிக்கலாம். உயர்ந்தவன் என்ற எண்ணம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களை விட கெட்டவர் யாரும் இருக்க முடியாது.
சாதி, மதத்தின் பெயரால் ஆட்சி அமைந்த பிறகு நாடு முழுவதும் மக்கள் கடும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். மனுவை கொண்டு போய் பொது சுடுகாட்டில் தகனம் செய்யும் வரை நமது பணி ஓயக்கூடாது. அதுவரை நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என சூளுரைக்க வேண்டும்" இவ்வாறு பேசினார்.