Skip to main content

“தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்வீர்களா முதல்வரே?” - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

Published on 11/11/2023 | Edited on 12/11/2023

 

"Would you like to congratulate the festival of Diwali,?" - Vanathi Srinisavasan MLA

 

இந்தியா முழுவதும் நாளை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பா.ஜ.க. மகளிர் அணி தேசியச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இது குறித்து அவர் தனது அறிக்கையில், "நாளை (12.11.2023) பாரதம் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் இந்துக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறார்கள். புத்தாடை, இனிப்பு, விதவிதமான உணவு வகைகள், பட்டாசு என கொண்டாட்டமான பண்டிகை இது. தீபாவளி என்றாலே ஒரு வாரத்திற்கு முன்பே குழந்தைகள் உற்சாகமாகி விடுவார்கள். பண்டிகைகளின் நாடான நம் பாரதத்தில் வெகு உற்சாகமான கொண்டாட்டங்களில் தீபாவளிக்கென்று தனியிடம் உண்டு. தீபாவளியை மையப்படுத்திய வணிகம் என்பது பல லட்சம் கோடி ரூபாய் இருக்கும்.

 

எவ்வளவு தான் அதர்மம், அநீதிகள் தலைதூக்கினாலும் இறுதியில் தர்மமே அதாவது அறமே வெல்லும் என்பதுதான் தீபாவளியின் அடிப்படை தத்துவம்.

 

பாரதத்தின் மற்ற மாநிலங்களை விடவும் நம் தமிழ்நாட்டில் தீபாவளி வெகு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி சார்ந்த பட்டாசு, ஜவுளி உள்ளிட்ட வணிகமே தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தீபாவளிக்கு ஒரு வார்த்தை கூட வாழ்த்து சொல்வதில்லை. ஆனால், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு தவறாமல் பக்கம் பக்கமாக வாழ்த்து சொல்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவர் தலைவராக உள்ள தி.மு.க.வும் இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என் மனைவி கிறிஸ்தவர் என பெருமையாக சொன்ன, முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை டெங்கு, மலேரியா, கொசு போல ஒழிப்பேன் என பேசுகிறார்.

 

திமுக தலைவராக மு.க. ஸ்டாலினிடம் தீபாவளி வாழ்த்துகளை யாரும் எதிர்பார்க்கவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால், முதலமைச்சர் என்பவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் அனைவருக்கும் பொதுவானவர். குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டியது முதலமைச்சரின் கடமை. ஆனால், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அக்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. அப்படி ஒரு வார்த்தை கூட வாழ்த்து சொல்ல முடியாத அளவுக்கு இந்துக்கள் மீது அப்படி என்ன வெறுப்பு என்பது தெரியவில்லை.

 

இந்துக்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்? எனவே, மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே இந்த தீபாவளிக்காவது வாழ்த்துச் சொல்வீர்களா? அல்லது வழக்கம் போல செலக்டிவ் மதச்சார்பின்மை அதாவது இந்து எதிர்ப்பைதான் தொடரப் போகிறீர்களா?” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்