மழை இல்லாமல் கடும் வறட்சியில் தத்தளிக்கிறது தமிழகம். பசுமை போர்த்தி விரிந்து கிடக்கும் வயல்கள் எல்லாம் கட்டாந்தரையாகவும், பாலைவனங்களாகவும் கிடக்கும் அவலம். எங்கே தண்ணீர் வற்றினாலும் ஆறுகள் ஓடைகளின் கரையோர பகுதிகளில் (நிலத்தடி )நீர் வற்றாது எனவேதான் நாடோடிகளாக காடு மேடெல்லாம் சுற்றி திரிந்த மனித இனம் நதிக்கரையோரம் தங்கி தங்கள் வாழ்வை தொடங்கினார்கள். நாகரீகம் வளர்ந்தது. அப்படிப்பட்ட நதிகள், ஆறுகள், ஓடைகள் நீர்நிரம்பி வளைந்து நெளிந்து ஓடின ஆனால் இன்று ஆறுகள் நாவரண்ட நாக்கு தாகத்தை தணிக்க தண்ணீருக்கு ஏங்குவது போல ஏக்கத்துடன் வானத்தை வெரித்து பார்த்தபடி வெப்ப சூட்டை உள்வாங்கி நீண்டு படுத்துக்கொண்டு உறக்கமின்றி ஏங்கி கிடக்கின்றன.
வருண பகவான் வரவை எதிர்நோக்கி இது மட்டுமா? போரில் மடிந்து கிடக்கும் வீரர்களை போலநீரின்றி பட்டுப்போய் தலை சாய்ந்து கிடக்கும் மரங்கள் இப்படி இயற்கையே பாடாத பாடுபடும்போது மனித இனம் என்ன பாடுபடும். குடிநீருக்கே பலகிலோ மீட்டர் தூரம் காலி குடங்களோடு அலையும் அவலம். இதற்காக தினசரி போராட்டங்கள். குடிக்க, குளிக்க, துடைக்க என தனது அன்றாட தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் பெரும் திண்டாட்டம் - இதற்கு தீர்வு இயற்கை கொடுக்கும் மழை வரவு ஒன்றுதான். இதற்கு சாதாரண மக்கள் முதலமைச்சர்கள் வரை மழைக்காக தெய்வத்திடம் வேண்டி யாகம், பூசை, வேள்வி என தினசரி நடத்துகிறார்கள் மழைவேண்டி. இப்படித்தான் விழுப்புரம் மாவட்டம் கிளியூரில் ஒரு வித்தியாசமான வழிபாடு நடத்தியுள்ளனர்.
ஊரின் எல்லையுள்ள எல்லைக்கல் இந்த கல் வெறும் கல் அல்ல ஊரை காக்கும் எல்லைதெய்வம். அந்த தெய்வத்திற்கு இன்று காலை அந்த கால குமரிகள் (பாட்டிகள்) ஒன்று கூடி அந்த கல்லுக்கு அபிஷேகம் செய்து பொட்டு வைத்து பூ மாலைகளால் அலங்காரம் செய்து அதற்கு பிரசாதமான கூழை கிண்டி அதை படையல் வைத்து அந்த எல்லை கல்லை சுற்றி அமர்ந்து ஒப்பாரி வைத்து நீண்ட நேரம் அழுது வழிபாடு செய்துள்ளனர். கடும் வறட்சி காலங்களில் வயதான பெண்கள் இப்படி ஒப்பாரி வைத்து வழிபாடு செய்தால் ஊரைகாக்கும் எல்லை தெய்வம் மழையை வரவழைத்து தங்களை காப்பாற்றும் என அவர்கள் நம்புகிறார்கள். இப்படி ஏற்கனவே பலமுறை காப்பாற்றியுள்ளது எங்கள் எல்லை தெய்வம். இது எங்கள் முன்னோர்களின் காலம் காலமான வழிபாட்டு முறை அதை இப்போது நாங்களும் தொடர்கிறோம் என்கிறார்கள் அந்தக் கால குமரிகள். அவர்கள் நம்பிக்கை பலிக்கட்டும் மழை கொட்டட்டும்.