Skip to main content

உலகப் பாரம்பரிய வார விழா; தொன்மைப் பொருட்கள் கண்காட்சி

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம் 2023 தொன்மைப் பொருட்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா. சுந்தரராஜன்  தலைமை வகித்தார், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் சு. காளீஸ்வரன் வந்தோரை வரவேற்றார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி தொல்நடைக் குழு பெருமைமிகு வழிகாட்டி செ. கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்  (பொறுப்பு) திருமதி ஜெயமணி அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மரபு நீட்சியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டையும் மரபையும் பாதுகாக்க முடியும் சிவகங்கையில் உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

 

சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை மகளிர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் இராதா கிருஷ்ணன்,சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் வித்தியா கணபதி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் இரா.நரசிம்மன் நன்றியுரைத்தார்.

 

இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து மூன்று ஆண்டுகளாக உலகப் பாரம்பரிய விழாவை கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தரங்க நிகழ்வாக நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழா இந்த ஆண்டு கண்காட்சியாக நடத்தப்பட்டது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற இக்கண்காட்சியில் 600 க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழுவினர், அவ்வப்போது மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவகங்கை சுற்றுப்பகுதியில் கிடைத்த இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள், மண்ணால் ஆன குழாய்கள், இரும்புக் கழிவுகள் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு,எலும்பு முனைக்கருவி, பானையோட்டுக் குறியீடுகள், சங்க கால செங்கல் மற்றும் மேற்கூரை ஓட்டு எச்சங்கள், வட்டச் சில்லுகள், ராஜராஜ சோழன்  பீஜப்பூர் சுல்தான் நாணயங்கள் உட்பட பழமையான நாணயங்களும் இருந்தது.

 

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக இணைச்செயலர் பீர்முகமது அவர்களது பத்தாண்டு கால சேகரிப்பில் உள்ள கலைநயமிக்க வெண்கலப் பொருள்கள், மரப் பொருள்கள், கத்திகள், வாள்கள், பழமையான செட்டிநாட்டு புழங்கு பொருட்கள், உரல் உலக்கை பழமையான கண்ணாடிப் பொருட்கள், இன்றைய பயன்பாட்டில் இல்லாத பழமையான மின்சாதன பொருட்கள், பலதரப்பட்ட தொலைக்காட்சிகள் பல வகையான வானொலிகள் முதலியவற்றுடன்  மௌண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பனையோலைகள் பழமையான விளக்குகள் மற்றும் மன்னர் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வளரி, வாள் பழமையான மின்சாதன பொருட்கள், விளக்குகள் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் காட்சிப் படுத்தப் பெற்றிருந்தன.

 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு வைச்சேர்ந்த பொருளர் பிரபாகரன், இணைச் செயலர் முத்துக்குமார், சரவணன்,பாலமுருகன், அலெக்ஸ் பாண்டியன், முத்துக் காமாட்சி, மீனாள், மற்றும் மன்னர் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் பர்வத ரோகிணி, பழனிவேல் முருகன், தனலட்சுமி காந்தி அழகப்பன், வெங்கட கிரி,பிரசாத், மனோகரன் ஆகியோர்  செய்திருந்தனர். சிவகங்கை மன்னர்  கல்வி நிறுவனங்கள்  மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பள்ளிகள் என மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தொன்மைப் பொருட்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்