தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தினார்கள்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆ.ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கைத் தாவரங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தடயங்கள் பற்றியும்; ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ் கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும்; கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி வே.சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்ககால தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பற்றியும் படங்களுடன் விளக்கினர். உதவிப் பேராசிரியர் பெ.கோபாலகிருஷணன் நன்றி கூறினார்.