Skip to main content

விடியற்காலை 6 மணிக்கு கருத்தரங்கம்; ஆர்வமுடன் கலந்துகொண்ட திமுக மாணவரணி

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

 workshop for DMK students wing has been completed in Jolarpet

 

திமுக மாணவரணிக்கான மூன்று நாள் கருத்தியல் பயிலரங்கம் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் அக்டோபர் 27 ஆம் தேதி தொடங்கி, 29 ஆம் தேதி மாலை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில மாணவரணி நிர்வாகிகள் என 100க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.

 

திமுக மாணவரணி மாநிலச் செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த கருத்தியல் பயிற்சி பயிலகத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப. வீரபாண்டியன் கலந்துகொண்டு மூன்று நாள் அங்கேயே இருந்து பயிற்சி வகுப்புகளை வழிநடத்தினார்.  

 

தினமும் 5 அமர்வுகள் என மாணவரணி நிர்வாகிகளுக்கு 3 நாட்கள் பயிற்சிகள் வழங்கினர். இதில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி. லெனின், தமிழ்வேள் செந்தில்வேலன், திக ஓவியா, திமுக ஊடக அணி அமுதரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை உமாபதி, ராஜீவ்காந்தி, சுபகுணராஜன், செந்தலை கவுதமன், தோழர் மருதையன், உமா, பிரின்ஸ் கஜேந்திரபாபு, மதிவதினி, வாலாசா வல்லவன் போன்றோர், நீதிக்கட்சி முதல் இன்றைய திராவிட ஆட்சி வரை, திராவிட இயக்க வரலாறு, திராவிட தலைவர்கள் வரலாறு, கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், சமூகநீதி, பாலின சமத்துவம், கலைத்துறையில் திராவிடத்தின் பங்கு, மதநல்லிணக்கத்தில் திமுகவின் பங்கு, எதிரிகளின் பொய்களை எதிர்கொள்வது, கட்சி மீதான அவதூறுகளுக்குப் பதிலளிப்பது எப்படி, சமூக வளைத்தளங்களில் இயங்குவது எப்படி, ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பரப்புவது, ஊடகத்தை எதிர்கொள்வது, மாணவர்களை திமுகவுக்கு கொண்டு வருவது, அவர்களுக்கு அரசியலை புரிய வைப்பது எப்படி என பயிலரங்கில் தனித்தனி அமர்வுகளில் கற்பித்தனர்.

 

 workshop for DMK students wing has been completed in Jolarpet

 

இந்த கருத்தியல் பயிலரங்கத்தில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் உறுப்பினர்கள், நீட் தேர்வு மரணங்கள், அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் கொலை சம்பவம், பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளாமல் விட்ட மணிப்பூர் கலவரம், ஊழல்கள், மாணவர் நலனுக்கு எதிரான தேசிய கல்விக்கொள்கை குறித்து நாடகமாக நடத்திக் காட்டினர்.

 

மூன்று நாளும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 18 மாவட்டங்களின் கழக மாநில, மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என 100க்கும் அதிகமானவர்களுக்கு அங்கேயே தங்கும் வசதி, உணவு வசதி போன்றவை பயிற்சியில் கலந்துகொள்கிறவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காலை 6 மணிக்கெல்லாம் ஒரு அமர்வு வைத்திருந்தனர், அதற்கும் நிர்வாகிகள் ஆர்வமுடன் வந்து அமர்ந்திருந்தனர். பயிலரங்கத்துக்கு வந்த பேச்சாளர்களிடம் மாணவரணியினர் தங்களிடம் உள்ள கேள்விகளை எழுப்பி தெளிவு பெற்றனர்.

 

பயிலரங்கத்தின் இறுதி நாளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவுக்கு பதிலாக கழக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் மருத்துவர் கம்பன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிலரங்கில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.

 

 workshop for DMK students wing has been completed in Jolarpet

 

மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ மற்றும் துணைச் செயலாளர்கள், கூறியபடி மூன்று நாள் பயிலரங்க நிகழ்ச்சியை ஏலகிரியில் நடத்திக் காட்டியுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே. பிரபாகரன் மற்றும் துணை அமைப்பாளர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்ததை மாநில நிர்வாகிகள் பாராட்டினர். இந்த பயிற்சி பாசறை குறித்த தகவல்கள், கலந்துகொண்டவர்கள், இதன் வெற்றி குறித்து திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதியிடம் அறிக்கையாக மாநிலச் செயலாளர் எழிலரசன் வழங்கியுள்ளார்.

 

வடக்கு மண்டல பயிற்சி பாசறை நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக தெற்கு, மேற்கு, டெல்டா மாவட்டங்களிலும் பயிற்சி பயிலரங்கை விரைவில் நடத்தும் முடிவில் உள்ளது திமுக மாணவரணி.

 

 

சார்ந்த செய்திகள்