புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றிய சிறப்பு பிரிவு போலிஸ் இன்ஸ்பெக்டர் உள்பட வெள்ளாற்று கரையோர காவல் நிலையங்களில் பணியாற்றிய சிறப்பு பிரிவு போலிசார் 13 பேர் மண்டலம் விட்டு மண்டலம் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதானமாக உள்ளது வெள்ளாறு, அக்னி ஆறு, கோரையாறு இந்த ஆறுகளை இணைத்து காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டுவரக்கோரி 50 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளின் இந்த கோரிக்கை ஏனோ நிறைவேற்றப்படவில்லை.
இந்த ஆறுகளில் தண்ணீர் வந்தால் விவசாயிகள் வாழ்வு சிறக்கும். ஆனால் தண்ணீர் வரவில்லை என்றால் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு சில திருடர்களுக்கும் வாழ்வு செழிக்கும். இதில் இரண்டாவதைதான் செய்து வருகிறார்கள். இவர்கள் செழிக்கிறார்கள் விவசாயிகள் குடிக்க கூட தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். மணல் கொள்ளையை தடுங்கள் நிலத்தடி நீர் ரொம்ப கீழே போயிடுச்சு என்று போராடி போராடி ஓய்ந்துவிட்டார்கள். தடுக்க வேண்டியவர்கள் மணல் கொள்ளையர்களுக்கு காவல் காக்கிறார்கள்.
இந்தநிலையில்தான் முதல்கட்டமாக வெள்ளாற்றுக் கரையோரம் உள்ள சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் உள்பட 13 போலிசார் மண்டலம் விட்டு மண்டலம் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில்.. திருச்சிக்கு புதுசா வந்த டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்தநிலையிலதான் புதுக்கோட்டையில் மணல் கடத்தலும் கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனையும் அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்தார். தொடர்ந்து தனி டீம் அமைத்து ரகசிய விசாரணை செய்தபோது மணல் திருட்டால் சில வருடங்களுக்கு முன்பு இரட்டை கொலை வரை நடந்திருக்கிறது என்பதை அறிந்தவர் மறுபடியும் மக்கள் தொடர்ந்து போராடினாலும் திருட்டு நடக்கிறது அதனால் மறுபடியும் ஏதாவது உயிர்பலிகள் கூட நடக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டார். ஆனால் இந்த தகவல்களை கொடுக்க வேண்டிய சிறப்பு தனிப்பிரிவு எல்லா தகவல்களையும் மறைத்துள்ளதுடன் அதில் பலர் மணல் திருடர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதையும் ஆதாரங்களுடன் எடுத்தார். அதேபோல கஞ்சா வியாபாரிகளிடம் சிலர் தொடர்பில் இருப்பதையும் தனது ரகசிய குழு மூலம் அறிந்தவர் முதல்கட்டமாக வெள்ளாற்றுப்படுகையில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள சிறப்பு பிரிவினரை மண்டலம் விட்டு மண்டலம் மாற்ற பரிந்துரை செய்தார்.
இப்படி ஒரு நடவடிக்கையை அறியாமல் இருந்த போலிசார் இப்பொழுது திக் திக்'னு இருக்காங்க. அதில் சிலர் மணல் கொள்ளையர்களிடமும், மாண்புமிகுவிடமும் போய் நீங்க சொன்னீங்கன்'னுதான் தகவல்களை மறைச்சோம். இப்ப இப்படி மாத்தி உத்தரவு வந்திருக்கு. அந்த உத்தரவை ரத்து செய்யனும் என்று மன்றாடி கொண்டிருக்கிறார்கள்.
டி.ஐ.ஜி யின் அடுத்த நடவடிக்கை கோரையாற்றுப் படுகையில் உள்ள சிறப்பு பிரிவினரை மாற்றுவது. அதாவது 15 நாளைக்கு முன்னால் கிராம மக்களே லாரி, பொக்கலின்களை பிடிச்சு போராட்டம் நடத்தினாங்க. அந்தபகுதிதான் கொலை நடந்த பகுதியும் கூட அதனால அந்த பகுதியிலும், அடுத்து கறம்பக்குடி பகுதியில் உள்ள அக்னி ஆற்றில் மணல் கொள்ளைக்கு துணை போகும் போலிசாரையும் மாற்ற திட்டமிட்டு ஆதாரங்களை திரட்டி வருகிறார் என்றனர் ரகசியம் தெரிந்த போலிசார்.
அதே போல புதுக்கோட்டை நகரில் சந்தைப்பேட்டை, திருவப்பூர் பகுதியில் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கப்படும் கஞ்சாவையும், விற்பனையாளர்களையும் பிடித்து மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.