தேசிய வேலை உறுதித்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் விவசாயத் தொழிலாளர்கள் வியாழக்கிழமையன்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் வறட்சியின் காரணமாக விவசாய வேலைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய வேலை உறுதித்திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த வேலைகள் தற்பொழுது முறையாக வழங்கப்படுவதில்லை. வேலை நாட்கள் கடுமையாக சுருக்கப்படுவதோடு, நிர்ணயித்த கூலியும் வழங்கப்படுவிதில்லை. எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை என்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு விவசயிகள் சங்க ஒன்றியச் தலைவர் என்.மகாலிங்கம், வி.தொ.ச அமைப்பாளர் ஆர்.முருகன், மாதர் சங்க அமைப்பாளர் டி.இருதயமேரி ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சா.தோ.அருணேதயன் மற்றும் சங்க நிர்வாகிகள் எம்.சண்முகம், சின்னப்பன், கண்ணுச்சாமி, கருப்பையா, காமராஜ், அறிவுக்கன்னி, ராஜம், சின்னம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தைத் தொடர்ந்து விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.