செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் குப்பை வாகனத்தின் டிப்பர் தொழில்நுட்ப பகுதியில் தலை சிக்கி ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் குப்பை அள்ளுவதற்காக ஹைட்ராலிக் டிப்பர் அமைப்பு கொண்ட சிறு பேட்டரி இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஜய் என்கின்ற இளைஞர் கடந்த ஒரு மாத காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பை மற்றும் மண் ஆகிவயற்றை அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டுவதற்கு வந்துள்ளார். அப்பொழுது கவனக் குறைவாக ஹைட்ராலிக் இயந்திரத்தை இயக்கிய பொழுது அவருடைய தலை அதில் சிக்கிக் கொண்டது.
இதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி உயிரிழந்தார். கேளம்பாக்கம் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு எந்த வித பாதுகாப்பு பயிற்சிகளும், உபகரணங்களும் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பை மற்றும் மண்ணைக் கொட்டி விட்டு ஹைட்ராலிக் இயந்திரத்தை கீழே இறக்கும் பொழுது அவர் தலை சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அவர் தனி ஒருவராக இருந்ததால் காப்பாற்ற யாரும் இல்லாததால் சம்பவ இடத்திலேயே இறந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.