"கேரளா அருகே டவ்-தே புயலில் நடுக்கடலில் சிக்கி மாயமான நாகை சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த 9 மீனவர்களை மத்திய அரசின் உதவியோடு தேடும் பணி அதிதீவிரமாக நடைபெறுகிறது" என உறவினர்களுக்கு நேரில் ஆறுதல் தெரிவித்து, இத்தகவலை கூறினார் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
நாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், கேரளா அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, டவ்-தே புயலில் சிக்கி, நடுக்கடலில் படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் மாயமாகினர். நடுக்கடலில் தத்தளித்து மாயமான மீனவர்கள் இதுவரை என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைத்திடவில்லை. மீனவர்கள் மீட்கபடாத காரணத்தால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில், சாமந்தான் பேட்டை மீனவ கிராமத்திற்கு வந்திருந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது மீனவ பெண்கள் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுது, மீனவர்களை மீட்க வலியுறுத்தினார்கள். தொடர்ந்து திமுக சார்பாக பாதிக்கபட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், "கடலில் சிக்கியுள்ள மீனவர்களை, சக மீனவர்களைக் கொண்டே தேடுவதற்கு கேரளா அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். நாளை காலை நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், வெளிமாநில ஊடகங்களில் மீனவர்கள் கிடைத்துவிட்டதாக வரும் தகவல்கள் நம்புபடி இல்லை. தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தொடர் நடவடிக்கை எடுத்துவருகிறார். திமுக சார்பாக 9 மீனவர்களின் குடும்பத்திற்குத் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்ததால் மத்திய அரசு கப்பல் மூலம் தேடும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.