கடந்த மார்ச் மாதம், சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையைத் திறந்து வைத்தார் ரஜினிகாந்த்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.சி. சண்முகம் புதிய நீதிக்கட்சியின் தலைவரும் ஆவார். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்றும் அவருடைய அரசியல் பயணத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் சொல்லி வருபவர். அவருக்கு இங்கிலாந்து-ஸ்காட்லாந்து-கிளாஸ்கோவில் உள்ள ராயல் காலேஜ் ஆப் பிசிசியன்ஸ் & சர்ஜன்ஸ் அமைப்பு டாக்டர் பட்டம் தந்து கவுரவித்தது. சிறப்புமிக்க இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியராக இருக்கிறார் ஏ.சி.சண்முகம். ஏழைகளுக்குத் தேவையான மருத்துவ சேவை வழங்கி வருவதற்கான அங்கீகாரம் இதுவென்று ஏ.சி.சண்முகம் தலைவராக உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி குழும நிறுவனங்கள் பெருமிதத்துடன் சொல்கின்றன.

இங்கிலாந்தின் மதிப்புக்குரிய ‘பெலோஷிப்’ விருது பெற்ற ஏ.சி.சண்முகத்துக்கு, இன்று சென்னை-தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது. நண்பரின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் “எல்லாருடைய இதயத்துலயும், மனசுலயும், எல்லா ஜீவன்கிட்டயும் அந்த ஆண்டவன் இருக்கிறான். ஏழைகளுக்கு உதவி செய்யறது, அதுதான் முக்கியம். அதைச் செய்தாலே, ஆண்டவனுக்கு செய்த புண்ணியம். இங்கே இருக்கிறவங்கல்லாம் உழைப்பாளி. நல்லா உழைச்சு முன்னேறிடலாம்னா, முன்னேறிட முடியாது. நல்லா உழைச்சவங்க எல்லாரும் வெற்றி பெற முடியாது. எல்லாருமே நல்லா வெற்றியடையணும், நல்லா சக்சஸ்ஃபுல்லா ஆகணும், நிறைய பணம் சம்பாதிக்கணும்னுதான் எல்லாரும் கஷ்டப்படறாங்க. எல்லாரும் அதை அடைய மாட்டாங்க. வெறும் முயற்சியாலும் உழைப்பாலும் மட்டும் இல்ல. ஆண்டவனுடைய அருள், அது இருக்கணும். நம்முடைய, நல்ல ஒரு எண்ணம் இருக்கணும். அது இருந்தால்தான் வாழ்க்கையில முன்னேற முடியும்.” என்று மனம் திறந்து பேசினார்.
ரஜினியின் இந்தப் பேச்சை ஒரேயடியாக விரக்தி என்று சொல்லிவிட முடியாது. எந்த இடத்தில் பேசினாலும், அவர் ஆண்டவனைக் குறிப்பிடத் தவறுவதில்லை. ஆனாலும், லிங்கா, கோச்சடையான், கபாலி, காலா போன்ற சினிமாக்களின் மூலம், வர்த்தகரீதியாக தனக்கு கிடைத்த அனுபவமோ என்னவோ, தனி மனிதனின் வெற்றி, தோல்வி குறித்தெல்லாம் இத்தனை வெளிப்படையாக அவரைப் பேச வைத்திருக்கிறது. இது போதாதா? ‘ரஜினியின் பக்குவம் யாருக்கு வரும்?’ என்று. சந்தடி சாக்கில் ‘உச்’ கொட்டுகிறது திரைஉலகம்!