கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இன்று 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையிலும், 2 ஆம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது என அதிகாரிகள் கூறினார்கள்.
இந்நிலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வீடுகளுக்கே நேரடியாக வழங்கும் பணி இன்று துவங்கியது. கரூர் மாநகராட்சிப் பகுதிகளான கரூர், வெங்கமேடு, ராயனூர் தாந்தோணி மலை, வடிவேல் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்கள், ஆண்கள் என வரிசையாக நின்று டோக்கன் பெற்றுச் சென்றனர்.
விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வீடுகளுக்கே விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலைக்கடைக்கு வரத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக்கடைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இத்திட்டம் குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.