புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் புளிச்சங்காடு கைகாட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பிரசாத்(வயது 39). இவரும், இவரது மனைவி மற்றும் 2 கைக்குழந்தைகளுடன் பட்டுக்கோட்டையில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் ஏறி கைகாட்டி வந்துள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சீட்டு கிடைக்காமல் இருவரும் ஆளுக்கொரு குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தனர். கையில் ஒரு பையும் இருந்துள்ளது.
இதனைப் பார்த்த ஒரு சீட்டில் அமர்ந்திருந்த இரு பெண்கள் நீங்கள் நிற்க சிரமப்படுவதால் குழந்தைகளையும், பையையும் கொடுங்கள் வைத்திருக்கிறோம். இறங்கும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி இரு குழந்தைகளையும், பையையும் வாங்கி வைத்துக் கொண்டனர். ராம்பிரசாத் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வருவதற்கு சற்று முன்பு குழந்தைகளையும் பையையும் வாங்கிய இரு பெண்களும் ராம்பிரசாத் மனைவியின் பைக்குள் இருந்த மணிபர்சை எடுத்து அதற்குள் இருந்த 8 பவுன் தங்க நகைகளை எடுத்து தங்கள் பைக்குள் வைப்பதை பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் பார்த்துவிட்டு சத்தம் போட ராம்பிரசாத் அவசரமாக தனது பையை வாங்கிப் பார்த்த போது தங்க நகைகளைக் காணவில்லை. அந்த நகைகளை அந்தப் பெண்களின் பைகளுக்குள் இருந்து மீட்டனர். இதைப் பார்த்த மற்ற பயணிகள் நகை திருடிய பெண்களை சரமாரியாக தாக்கி வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இரு பெண்களையும் கைது செய்த வடகாடு போலிசார் நடத்திய விசாரனையில் திருச்சி சமயபுரம் தாஸ் மனைவி லலிதா (வயது 49), மணி மனைவி அம்பிகா (வயது 60). இவர்கள் இப்படி பல ஊர்களுக்கும் பேருந்துகளில் பயணம் செய்து கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களை குறிவைத்து அவர்களது பைகளில் உள்ள பொருட்கள், குழந்தைகள் கழுத்துகளில் கிடக்கும் நகைகளைத் திருடிக் கொண்டு செல்வதை வழக்கமாக செய்து வருவதும் செல்போன்களைத் திருடி உடனே சிம்கார்டுகளை கழற்றி வீசி விடுவதும் மேலும் நகைகள் திருடிவிட்டால் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முன்பு உள்ள நிறுத்தங்களில் இறங்கி மறு பேருந்தில் ஏறி சென்றுவிடுவதாகவும் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடகாடு போலிசார் நகைகளை திருடிய இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். இதே போல பல பெண்கள் பேருந்துகளில் வந்து நகை, பணம் திருடிச் செல்வதாகவும் கூறுகின்றனர்.