கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கடந்த 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டு பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. சிலருக்கு கடந்த 14 ஆம் தேதி முதலே அவர்களது வங்கிக் கணக்கில் கலைஞர் உரிமைத் தொகையான ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் கலைஞர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த சிலருக்கு இன்னமும் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மேல்முறையீடு செய்து உரிமைத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்து இருந்தது.
இதையடுத்து இன்று காலை முதலே ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். அதில் சில பெண்கள் திடீரென வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள திருமகன் ஈவேரா சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதேபோல் ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பெண்கள் கூறுகையில், “நாங்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்திருந்தோம். இதுவரை எங்களுக்கு எந்த ஒரு எஸ்.எம்.எஸ். வரவில்லை. எங்கள் வங்கிக் கணக்கில் பணமும் வரவு வைக்கப்படவில்லை. நாங்கள் சாதாரண கூலி வேலை செய்பவர்கள். எங்கள் பகுதியில் பலருக்கும் உரிமைத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கேட்டபோது, இன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்து விசாரித்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் நாங்கள் வேலையை விட்டு விட்டு தாலுகா அலுவலகத்திற்கு வந்தோம். இங்கு ஆன்லைன் செயல்படவில்லை என்கிறார்கள். நாங்கள் என்ன செய்யட்டும்?” என்றனர்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய வட்டாட்சியர் ஜெயக்குமார், “விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும். உங்களுக்கு என்ன காரணத்துக்காக இதுவரை கிடைக்கவில்லை என்று பார்க்கலாம். உங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். உங்களுக்காகவே தாலுகா அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அவர்களிடம் உங்களுக்கு என்ன சந்தேகம் உள்ளதோ அதைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுவரை பணம் ஏறாதவர்களுக்கு வரும் 23 ஆம் தேதிக்குள் பணம் அவர்களது வங்கிக் கணக்கில் ஏறிவிடும். உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்” என்றார். இதனை ஏற்றுப் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.