நாகையில் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி பெண்கள் சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் குற்றம்பொறுத்தான் இருப்பில் பல ஆண்டுகளாகக் கள்ளச்சாராயம் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. ஆனால் அரசு அதிகாரிகளும் போலீசாரும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று சேர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்களை விரட்டிவிட்டு அவர்கள் வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளை எடுத்து வந்து சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து வயல்வெளிகளில் வைத்து மறைத்து விற்பதாக அங்கு வந்த காவல்துறை அதிகாரியிடம் பெண்கள் முறையிட்டனர். தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையால் இந்த பகுதியில் பெண்களால் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து புகார் அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என ஆத்திரத்துடன் கோஷமிட்டதோடு காவல்துறை அதிகாரியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.