அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் ஐம்பெரும் விழா திருச்சியில் நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் நடந்தது. மக்கள் தேசம் கட்சியின் தலைவர் ஆசைத்தம்பி, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஸ்ரீதர் வரவேற்றார். விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைக்க ரூ.3 கோடி ரூபாயை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். இம்மானுவேல் சேகரனாருக்கு திருச்சியிலும் சிலை அமைக்கப்பட உள்ளது. திமுக அரசு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் உறுதுணையாக இருக்கும் .வருகின்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு இங்கு கூடியிருக்கிற பெண்களால் தான் முடியும். நீங்கள் தான் வீட்டு அடிப்படி வரை சென்று தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக் கூற முடியும். வரும் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகம், பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற மக்களாகிய நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்களுக்கு திமுக அரசு என்றென்றும் உறுதுணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் திருவடிக்குடில் சுவாமிகள் சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மதிவாணன், சமத்துவ இந்து மக்கள் கட்சி தலைவர் அல்லூர் சீனிவாசன், ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் லட்சுமி நாராயணன், திருச்சி வளர்ச்சி குழு தலைவர் வழக்கறிஞர் என்.எஸ்.திலீப், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் திருச்சியின் மையப் பகுதியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் சிலையை நிறுவ வேண்டும், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வது, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு ஒரு தனி தொகுதியை ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுப்பது, 2016 முதல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத்திற்கு ஏதேனும் ஒரு வாரியம் வழங்க முதல்வரை சந்தித்து வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முசிறி ஒன்றிய செயலாளர் செந்தமிழன் நன்றி கூறினார்.