பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள நெரிசலான பகுதிகளில் சிறிது தூரம் நடைப் பயணம் என்ற பெயரில் கட்சியினர் புடை சூழ ஊர்வலமாக நடந்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவிநாசியில் தனது 3வது கட்ட நடைப் பயணத்தை தொடங்கியதாகக் கூறினார். இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் கோவையிலிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானிக்கு வந்த அண்ணாமலை, பவானி கூடுதுறை பிரிவில் தனது ஊர்வல பயணத்தை தொடங்கினார். ஈரோடு மேட்டூர் மெயின் ரோடு வரை சுமார் அரை கிலோ மீட்டர் நடந்த அண்ணாமலை திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
“எனது நடை பயணம் காலதாமதமாக தொடங்கப்பட்டது; காலை மழை பெய்யும் என்ற நிலையில் காலதாமதமாக தொடங்கப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். காசிக்கு செல்ல முடியாதவர்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வருகிறார்கள். குஜராத் மாநிலத்தில் உள்ளது போன்று கூடுதுறையில் பவானி, காவிரி அமுத நதி சங்கமிக்கும் இடமாக பவானியில் உள்ளது. இங்குதான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது
பவானி ஜமக்காளம் தொழில் செய்ய முடியாமல் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் நலிவுற்று உள்ளார்கள். தமிழகத்தில் பட்டத்து இளவரசர் உதயநிதிக்காக ஆட்சி நடந்து கொண்டுள்ளது. இதனால் மக்கள் ஆசியோடு பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைய வேண்டும். முந்தைய திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 2ஜி உள்ளிட்ட ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்ள 68 அமைச்சர்கள் மேல் குண்டூசி கூட ஊழல் புகார் இல்லை; மக்கள் சொல்லும் வேலையை செய்யும் எம்பியாக பாஜக எம்பி இருக்கின்றனர். ஆனால் திமுக எம்பியை அப்படி பார்க்க முடியாது. வீடுகள் தோறும் கேஸ் இணைப்பு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட மத்திய அரசு நிறைவேற்றுவது தான் பாஜகவின் நோக்கம். பாஜகவில் சாதாரண பெண்கள் தான் மாவட்டத் தலைவராக உள்ளார்கள். 33 சதவீத இட ஒதுக்கீடு ஏழை வீட்டுப் பெண்கள் எம்பி, எம்எல்ஏக்கள் வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளார். இதனால் பிரதமர் நரேந்திர மோடி கரத்தை பெண்கள் பலப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்” என்றார்.
அதன் பிறகு காரில் ஏறி புறப்பட்ட அவர் மாலை 4:30 மணியளவில் அந்தியூர் தவிட்டுப்பாளையம் சென்று மூப்பனார் சிலையிலிருந்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதி வரை சுமார் அரை கிலோ மீட்டர் மட்டும் ஊர்வலமாக வந்து பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசினார்.