கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள வரதப்பனூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட புக்கிவாரி கிராமத்தில் பல வருடங்களாக டாஸ்மாக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் குடித்துவிட்டு மது பிரியர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் குடித்துவிட்டு போதையில் உள்ளே சென்று வீண் தகராறில் ஈடுபடுவதும், பெண்கள் மீது பாலியல் அத்து மீறல்கள் செய்ய முயல்வது போன்ற பல செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மக்கள் இரண்டு முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊராக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகளின் போக்கை கண்டித்து வரதப்பனூர் பகுதியில் உள்ள அண்ணா நகர், புக்கிரவாரி, புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நேற்று (27.5.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் சின்னசேலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்குழு பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கடையை உடனே அகற்றினால் தான் அந்த இடத்தை விட்டு நகர்வோம் என மகளிர் குழு பெண்கள் பிடிவாதமாக கூறியுள்ளனர் அப்போது காவல்துறை அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி விரைவில் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை மகளிர் குழுவினர் தற்போதைக்கு கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர்.