"பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தை பாதுகாக்கும் எண்ணம் இல்லை. மாறாக அரசியல் கட்சித் தலைவர்களை பிரித்து பிரித்து பழிவாங்கும் வேலையையை பார்த்துவருகிறார்", என தனக்கே உரிய பாணியில் குற்றம்சாட்டியுள்ளார் புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி.

காரைக்காலுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அதில் ," பணப்புழக்கம், கட்டுமான பணி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் மிகவும் சரிவை சந்தித்துவருகிறது. அனைத்திற்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சியின்போது 9 சதவிகிதமாக இருந்த இந்திய பொருளாதாரம் மோடியின் பாஜக ஆட்சி காலத்தில் 4 சதவீதமாக சரிந்துள்ளது. இது மிக மிக வேதனையான விஷயம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தருவதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய மோடி கடந்த ஐந்தாண்டு காலத்தில் 5 கோடி பேரின் வேலையை இழக்க வைத்து வயிற்றெரிச்சலை பெற்றிருக்கிறார். இப்படி ஒரு கொடுமை வேறு எந்த நாட்டிலும் நடந்திவிடவில்லை.
பிரதமர் மோடிக்கு இந்திய பொருளாதாரத்தை பாதுகாக்கும் எண்ணம் இல்லை, அரசியல் கட்சித் தலைவர்களை பிரித்துப் பிரித்து பழிவாங்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் கட்சி, ஆட்சியைப்பார்த்தே பாகுபாட்டோடு மோடி நிதி ஒதுக்கி வருகிறார். மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியின் அளவில் கூட புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்குவதில்லை." என கனத்த மனதோடு பேசி முடித்தார்.