Skip to main content

’விவசாயி நாட்டை ஆளலாம்; விஷவாயு நாட்டை ஆளக்கூடாது’ - ஸ்டாலின்

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 


 

இன்று (12-04-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல்காந்தி கலந்துகொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:

 

’’ இந்தியாவின் இளம் தலைவர் ராகுல் காந்தி என்று அழைப்பதை விட இந்தியாவின் பிரதமராக வரவிருக்கும் ராகுல் காந்தி என்று அழைப்பதுதான் இப்பொழுது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன். காரணம் யாரும் சொல்ல முன்வராத அவருடைய பெயரை அந்தப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று, முதன்முதலில் தமிழகத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராகுல் அவர்கள்தான் பிரதமர் என்று அறிவித்தவன் நான். எனவே, அந்த உணர்வோடு நான் உங்களிடத்தில் நின்று நம்முடைய வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள வந்திருக்கின்றேன். எனவே, நான் அறிவித்த அறிவிப்பு, இப்பொழுது எந்த நிலையில் அது வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் உங்களிடத்தில் அதிகமாக எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

எனவே. இங்கே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கக்கூடிய, எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்களுக்கு சேலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், கெளதம சிகாமணி அவர்களுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், கணேசமூர்த்தி அவர்களுக்கு ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், சின்ராஜ் அவர்களுக்கு நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், சகோதரி ஜோதிமணி அவர்களுக்கு கரூர் தொகுதியில் கை சின்னத்திலும், நீங்கள் சிறப்பான வெற்றியை தேடித்தர வேண்டும். தேடித் தருவீர்களா? நிச்சயமாக? உறுதியாக? நன்றி.

 

r

 

எனவே, நான் என்றைக்கு இந்த நாட்டின் பிரதமராக ராகுல்காந்தி  வந்திட வேண்டும் என்று முன் மொழிந்தேனோ, அது இன்றைக்கு எந்த அளவிற்கு வந்திருக்கின்றது என்பதற்கு, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், இந்தியா முழுவதும் ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை இப்பொழுது தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய ஊடகங்கள் இன்றைக்கு அதை வழிமொழியக்கூடிய நிலையில் அவர்களும் சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நான் என்னுடைய பயணத்தை திருவாரூரில் துவங்கினேன் ஏறக்குறைய முக்கால் பாகத்தை நான் முடித்து இருக்கின்றேன்.

 

அப்படி முடித்திருக்கக் கூடிய நிலையில், நான் கண்ட எழுச்சியை, உணர்ச்சியை, மக்களின் உணர்வை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்று சொன்னால் இங்கே அமர்ந்திருக்கக் கூடிய திரு ராகுல்காந்தி அவர்களுக்கு, நான் ஒரு உறுதிமொழியை சொல்ல விரும்புகின்றேன். நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற அந்த உறுதிமொழியை தான் நான் எடுத்துக் கூற விரும்புகின்றேன். புதுவையையும் சேர்த்து தமிழகம் உள்ளிட்ட 40 இடங்களில் மிகப்பெரிய ஆதரவு நம்முடைய அணிக்கு வந்து கொண்டிருக்கின்றது.

 

எனவே, நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. நேரு குடும்பத்தின் வாரிசாக வந்திருக்கின்றீர்கள், நீடித்த நல்ல ஆட்சியை தர வேண்டும். இந்திரா காந்தியின் பேரனாக நீங்கள் இங்கு வந்து இருக்கின்றீர்கள். கடந்த ஐந்து வருடமாக இந்த நாட்டு மக்கள் இந்த ஆட்சியால் பல்வேறு கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய இந்த மக்களை நாம் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவே, ராகுல் காந்தி அவர்களே நீங்கள் அண்மையில் உங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றீர்கள். அந்தத் தேர்தல் அறிக்கை வெளியிட்ட உடன், நான் நினைத்தது என்னவென்று கேட்டால் உடனடியாக டெல்லிக்கு பறந்து வந்து உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்ல வேண்டும், உங்களுக்கு மாலை அணிவித்து பாராட்ட வேண்டும் என்று நான் கருதினேன். அதற்கு என்ன காரணம் என்னவென்று கேட்டால், திராவிட இயக்கத்தின் எண்ணங்களை அப்படியே நீங்கள் அந்த தேர்தல் அறிக்கையில் பிரதிபலித்து இருக்கின்றீர்கள், அதற்காகத்தான் சொல்கின்றேன்.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை நான் கடந்த 19ஆம் தேதி வெளியிட்டேன். வெளியிட்ட நேரத்தில், ஊடகத் துறையைச் சார்ந்து இருக்கக் கூடியவர்கள், பத்திரிகை உலகத்தில் இருக்கக் கூடியவர்கள், என்னைப் பார்த்து கேட்டார்கள். கலைஞர் அவர்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றபொழுது அது கதாநாயகனாக அமையும் அதுபோல் இது அமையுமா? என்று கேட்டார்கள். நான் சொன்னேன் கதாநாயகன் மட்டுமல்ல கதாநாயகியும் இந்த தேர்தல் அறிக்கைதான் என்று சொன்னேன்.

 

அதுபோல் நம்முடைய ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால், எப்படி தி.மு.கழகத்தின் தேர்தல் அறிக்கை ஒரு ஹீரோ போன்று உள்ளதோ, அதுபோல் நீங்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கின்றது. அண்மையில் வெளியிட்ட மோடியின் தேர்தல் அறிக்கை ஜீரோவாக இருக்கின்றது.

 

ra

 

இந்த நிலையில்தான் தேர்தல் அறிக்கையை நான் இங்கு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பொழுது, சில விமர்சனங்கள் வந்தன. சில கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அறிவிப்புகளை, திட்டங்களை எப்படி மாநிலத்தில் இருக்கக்கூடிய ஒரு கட்சி சொல்லலாம்? ஸ்டாலின் என்ன பிரதமராக வர போகின்றாரா? என்றெல்லாம் விமர்சனம் செய்த ஒரு சூழ்நிலை இருந்தது.

இது எனக்கு தெரியாதா?

மத்தியில் நாம் கை காட்டக்கூடிய ஆட்சிதான் வரப்போகின்றது. ராகுல் காந்தி அவர்கள் தான் பிரதமராக வந்து அமரப் போகிறார். எனவே, அந்த தைரியத்தில், அந்த நம்பிக்கையில் தான் தேர்தல் அறிக்கையில் அவைகள் எல்லாவற்றையும் இன்றைக்கு சேர்த்து வெளியிட்டிருக்கின்றோம்.

ராகுல் காந்தி  வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கின்றது. நான் சிலவற்றை தலைப்புச் செய்திகளாக சொல்லுகின்றேன்.

விவசாயிகளின் கடன் ரத்து.

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட்.

ஜி.எஸ்.டி வரியை எளிமைபடுத்துகின்ற திட்டம்.

தமிழக மீனவர்களின் பிரச்னை.

கல்வியை மாநிலப் பட்டியலில் இணைப்பது.

எல்லாவற்றையும் தாண்டி மாநில உரிமையை பெற்றுத் தருவது என்ற ஒரு அருமையான அந்த உறுதிமொழிகளை தேர்தல் அறிக்கையில் ராகுல் காந்தி அவர்கள் தந்திருக்கிறார்கள்.

எனவே, மாநில உரிமை பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ராகுல் காந்தி அவர்கள் எடுத்துச் சொல்லி அதனை வெளியிட்டு இருக்கின்றார்கள் என்று சொன்னால் அப்படி வெளியிட்டிருக்கும் அந்த செய்தியை பார்த்த பொழுது, எனக்கு ஒரு மிகப்பெரிய கவலை வந்தது. என்ன கவலை என்றால், இதைப்பார்த்து ரசிக்க, மகிழ்ச்சி அடைய, அண்ணா இல்லையே! தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற அந்த கவலை என்னை ஆட்கொண்டது.

 

அவர்கள் இருந்திருந்தால் ராகுல் காந்தி அவர்களை உச்சிமுகர்ந்து பாராட்டி அவர்களுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்திருப்பார்கள். எனவே இந்த நிலையில்தான் நான் உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்ள விரும்புவது, தமிழகத்தில் ஒரு கொடுமையான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. மத்தியில் ஒரு அசிங்கமான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால் மோடி ஒரு சர்வாதிகாரி, அதேபோல் தமிழகத்தில் இருக்கக்கூடிய எடப்பாடி ஒரு உதவாக்கரை. எனவே, எதற்கும் உதவாத நிலையில் ஒரு ஆட்சியை அவர் நடத்திக் கொண்டிருக்கின்றார்.   எனவே, நான் கேட்க விரும்புவது அன்மையில் பி.ஜே.பி-யின் சார்பில் மோடி அவர்கள் வெளியிட்டு இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கையை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக தெரியும்.

 

நான் கேட்க விரும்புவது, அந்தத் தேர்தல் அறிக்கையில் என்ன இருக்க வேண்டும் என்றால், ஒன்று ஆட்சியில் இருந்த ஐந்து வருடத்தில் செய்த சாதனைகளை பெருமையோடு மகிழ்ச்சியோடு பட்டியல் போட்டு காட்டி இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற பொழுது, என்னென்னப் பணிகளை செய்யப் போகின்றோம் என்பதை சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் மாறாக, கனவு கண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எல்லாம் அந்தத் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருக்கின்றார்கள்.

மாநிலங்களின் உரிமைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றதா?

நீட் தேர்வு பற்றி அந்தத் தேர்தல் அறிக்கையில் ஒரு வரி இருக்கின்றதா?

வேலை வாய்ப்பு பற்றி ஏதேனும் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார்களா?

எனவே, சென்ற தேர்தலை போல் மோடி அவர்கள் கனவு காண்கின்ற நிலையில் தான் அதை அறிவித்திருக்கின்றார். அந்தத் தேர்தல் அறிக்கையில் இன்னொன்றையும் சொல்லி இருக்கின்றார்கள். என்னவென்று கேட்டால்,

2030க்குள் இந்தியாவை பொருளாதார நாடாக ஆக்குவோம். எப்பொழுது என்றால் 2030ல். இப்பொழுது 2019ஆம் ஆண்டு.

2025க்குள் இந்தியாவை அமெரிக்கா போல் மாற்றுவோம்.


032க்குள் அமெரிக்க பொருளாதாரத்தை எட்டுவோம்.

2022க்குள் விவசாய வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்திக் காட்டுவோம்.

2022க்குள் நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் வீடு.

2022க்குள் 75 திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக ஆக்குவோம். இப்படியே வெரும் கனவுகளாக – கற்பனைகளாக – காகிதங்களாக தேர்தல் அறிக்கையை தயாரித்து அவர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள்.

நான் கேட்கின்ற கேள்வி, 5 வருடம் ஆட்சியில் இருந்து இருக்கின்றீர்கள். 2014 இல் இருந்து 2019ஆம் ஆண்டு வரை நீங்கள் தான் ஆட்சியில் இருந்தீர்கள் நீங்கள் தான் பிரதமர்.

2015 இல் என்ன செய்தீர்கள்?

2016 இல் ஏதாவது திட்டங்கள் தீட்டினீர்களா?

2017இல் ஏதாவது செய்ததுண்டா?

2018ல் ஏதாவது செய்ததுண்டா?

2019ஆம் ஆண்டு வரை என்ன செய்து கிழித்து இருக்கின்றீர்கள்? என்று சொல்லக்கூடிய ஆற்றல் இன்றைக்கு அவர்களுக்கு இருக்கின்றதா?

ஆனால், அதையெல்லாம் சொல்ல முடியாமல் 2022க்கு போய் இருக்கின்றீர்கள், 2032க்கு போய் இருக்கின்றீர்கள், 2047க்கு போய் இருக்கின்றீர்கள்.

அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்று கேட்டீர்கள் என்றால், அந்த தேர்தல் அறிக்கையில் மோடி என்ன சொல்கின்றார் என்றால், முதலில் நாங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றினோம். இனி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றப் போகின்றோம். இப்பொழுது மக்களின் விருப்பம் என்னவென்று தெரியுமா? உடனடியாக மோடி பதவியில் இருந்து இறங்கி வீட்டிற்கு போக வேண்டும். அதுதான் மக்களின் விருப்பம். அதை மோடி அவர்கள் நிறைவேற்றினால், 1000 கும்பிடு கும்பிடுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்திய நாட்டில் உள்ள அனைவரும் காத்திருக்கின்றார்கள்.

எனவே, மக்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

 

அதேபோல் எடப்பாடியிடம் என்ன செய்தீர்கள் என்று கேட்டால்? எதையும் சொல்ல முடியவில்லை. ஊர் ஊராக சென்று என்ன சொல்கின்றார் என்றால், நான் ஆடு வளர்த்தேன், மாடு வளர்த்தேன், கோழி வளர்த்தேன், நான் ஒரு விவசாயி என்று இதைத்தான் சொல்கிறாரே தவிர மக்களை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறோம் என்று சொல்ல முடிகிறதா?

 

விவசாயி நாட்டை ஆள்வதை ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை, என்று ஊர் ஊராக போய் சொல்லுகின்றார். விவசாயி நாட்டை ஆளலாம். ஆனால், விஷவாயு நாட்டை ஆளக்கூடாது. இதுதான் இன்றைக்கு நான் வைக்கின்ற கருத்து.

 

அதேபோல் மோடி என்ன சொல்கின்றார். நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என்று சொல்லுகின்றார். ஏழைத் தாயின் மகனாக இருந்தால் விவசாயிகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருப்பாரா? ஏழைத்தாயின் மகனாக இருந்தால் ஏழைகள் பரம ஏழைகளாக மாறிக் கொண்டு இருக்கின்றார்கள். ஏழைத்தாயின் மகனின் ஆட்சியில் விஜய மல்லையா, லலித் மோடி, கார்ப்பரேட் கம்பெனிகள், அவர்கள் எல்லோரும் கோடி கோடியாக கொள்ளை அடித்துக்கொண்டு போகின்ற காட்சி. அதற்கு காவலாளியாக இருக்கின்றார். மோடியே சொல்கின்றார் நான் ஒரு காவலாளி என்று.

அவர் காவலாளி அல்ல களவாணி. களவாணி தான் ஊழல்வாதிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, கொள்ளைக்காரர்களுக்கு, காவல் காத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு களவாணி யாக பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் விளங்கிக் கொண்டு இருக்கின்றார்.

 

அதுமட்டுமல்ல கடைசியாக நான் சொல்ல விரும்புவது, மோடி அவர்கள் என்ன சொல்கின்றார் என்று சொன்னால், ராகுல் காந்தி அவர்கள் மன்னர் குடும்பத்தை சார்ந்தவர் என்று ஒரு விமர்சனத்தை வைக்கிறார். நான் கேட்கின்றேன் மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக் கூடியவர் என்பது உண்மைதான். அந்த மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ராகுல்காந்தி அவர்கள் தான், ஏழைகளின் உள்ளம் அறிந்து மாதம் 6,000 ரூபாய் என ஒரு ஆண்டிற்கு 72,000 ரூபாய் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களுக்கு வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கின்றார்கள்.

 

r

 

மன்னர் குடும்பத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ராகுல்காந்தி  தான் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, அதேபோல் கடன் கட்டமுடியாத விவசாயிகளுக்கு குற்ற வழக்கு கிடையாது அவை அனைத்தும் ரத்து என அறிவித்து இருக்கிறார். மன்னர் குடும்பத்தில் இருந்து வந்து இருக்கக்கூடியவர் என்று சொல்கின்றீர்களே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். டீ ஆற்றினேன் என்று சொல்லுகின்றீர்கள். அது கேவலம் இல்லை, அருமையான தொழில் தான். ஆனால் டீ ஆற்றிக் கொண்டு இருந்தவர்கள் இன்றைக்கு ஏழைகளைப் பற்றி சிந்திக்கின்றீர்களா? டீ ஆற்றிக் கொண்டிருந்த இப்பொழுது இருக்கக்கூடிய பிரதமர் மோடி அவர்கள். யாரைப் பற்றிச் சிந்திக்கின்றார்?

பணக்காரர்களை கோடீஸ்வரர்களை கொள்ளையடித்து வைத்திருப்பவர்களை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருப்பார். இவை தவிர மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.

எனவே நாம் என்னவாக இருக்கிறோம், என்னவாக நடக்கின்றோம், என்ன செய்கின்றோம், என்பதுதான் முக்கியம். எனவே, அந்த உணர்வோடு இன்றைக்கு இந்த அணி அமைந்திருக்கின்றது.

நிறைவாக நான் தெரிவிக்க விரும்புவது. தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லை. அவர் இல்லாத நேரத்தில் நடைபெறுகின்ற முதல் தேர்தலாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலைச் சந்திக்கின்றோம். அவர் இல்லை என்று சொன்னாலும் அவருடைய மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலின் உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கின்றேன்.

அவர் இன்றைக்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்த நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய அண்ணனுக்கு பக்கத்தில் அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

அவர் அந்த இடத்தைப் பெறுவதற்கு நான் பட்ட கஷ்டம் - நான் பட்ட வேதனை - நாம் அனுபவித்த கொடுமை - இவற்றையெல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகமே மறந்து இருக்க வாய்ப்பு இல்லை.

அப்படி ஒரு கொடுமை நடந்தது. 6அடி இடம் கொடுக்க இந்த கொள்ளைக்கார கூட்டம் தடுத்தது.

உங்களுக்கு தெரியும் தலைவர் கலைஞர் யார் என்று. ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் இந்தியாவில் ஜனாதிபதிகளை அடையாளம் காட்டியவர். இந்தியாவிற்கு பிரதமர் இவர்கள்தான் என்று அடையாளம் காட்டி இருக்கக்கூடிய தலைவர். அண்ணாவின் நினைவிடத்தை அமைத்து தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு நினைவு மண்டபம் அதேபோல் மணிமண்டபம் அமைத்து தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

வள்ளுவர் கோட்டம் கண்ட தலைவர் கலைஞர் அவர்கள்.

இன்னும் சொல்லுகின்றேன், நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய அழகு தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்த தலைவர் நம்முடைய கலைஞர் அவர்கள். அவருக்கு இடம் மறுக்கப்படுகின்றது அதன்பிறகு நீதிமன்றம் வரை சென்று போராடி அதை பெற்றோம்.

 

தயவுசெய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். வெட்கத்தை விட்டு சொல்லுகின்றேன். எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் தலைவர் கலைஞர் அவர்களின் மகன் என்ற நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று, முதலமைச்சரின் கையைப் பிடித்துக்கொண்டு தலைவர் கலைஞர் அவர்களுக்கு விதிகளை எல்லாம் காட்டி நீங்கள் மறுக்கக் கூடாது. தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஒரு ஆறடி இடத்தை கேட்கிறோம். தலைவர் கலைஞர் அவர்களின் கடைசி ஆசை அண்ணாவிற்கு பக்கத்தில் உறங்க வேண்டும். அண்ணாவிடம் கடைசியாக அவர் கேட்டது, அண்ணா இரவலாக உன் இதயத்தை தந்திடு அண்ணா! நான் வரும்போது கையோடு கொண்டு வந்து உன் கால் மலரில் வைப்பேன் என்று சொன்னார். அந்த உறுதிமொழியை காப்பாற்ற நாம் துடித்தோம். அதற்காக பல கஷ்டங்களை அனுபவித்தோம். நீதிமன்றம் சென்றோம். நல்ல வேளை நீதிமன்றம் ஒரு அருமையான தீர்ப்பைத் தந்தது.

 

தலைவர் கலைஞர் தி.மு.க தலைவர் மட்டும் அல்ல. இந்தியா போற்றக்கக்கூடிய தலைவர் அல்ல, உலகம் போற்றக்கூடிய ஒரு தலைவர்.

 

தலைவர் கலைஞர்தி.மு.க தலைவர் மட்டுமல்லாமல் உலகமே வியந்து போற்றக்கூடிய மாபெரும் தமிழர் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கிறார். ஆகவே, அவருக்கு இடம் உண்டு என்று அறிவித்தது நீதிமன்றம். எனவே, நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று, அவரை அடக்கம் செய்து இருந்தாலும். அவருக்கு இடம் தர மறுத்த இந்த அயோக்கியர்கள் நாட்டில் இருக்கலாமா? நாட்டை விட்டு விரட்ட வேண்டாமா? அதற்குரிய நாள்தான் வருகின்ற 18ஆம் தேதி. அந்த 18ஆம் தேதி நீங்கள் அத்தனைபேரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரக்கூடிய வகையில், ஆதரவு தர வேண்டும். இந்தியாவின் பிரதமராக விரைவில் வரவிருக்கக்கூடிய ராகுல்காந்தி அவர்களை வருக – வருக – வருக என்று வரவேற்று விடைபெறுகின்றேன்.

சார்ந்த செய்திகள்