திருப்பூரைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி கோகிலா(28). அங்கன்வாடி பள்ளி ஆசிரியர். இவரது தாய் வீடு திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பலம் அருகே பெருமாள்பாளையத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக தான் படித்த கல்வி நிலையங்களில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று பெற ஏப்ரல் மாதம் தாய் வீட்டுக்கு சென்றார். மீண்டும் திருப்பூர் செல்ல ஏப். 4ம் தேதி குளித்தலைக்கு தனது தம்பியுடன் சென்று அங்கிருந்து பஸ் ஏறி திருப்பூர் சென்றார்.
தனது கல்விச்சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையையும் துணிப்பையையும் பஸ்சில் தான் அமர்ந்த இருக்கைக்கு மேலே இருந்த கேரியரில் வைத்திருந்திருக்கிறார். திருப்பூரில் பஸ்சை விட்டு இறங்கும்போது, அவர் சான்றிதழ் இருந்த பையைக் காணவில்லை. உடனே திருப்பூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் செய்துள்ளார்.
இந்நிலையில் ஏப். 9ம் தேதி ஒரு ஆண், கோகிலாவின் ஆதார் அட்டையிலிருந்த செல்போன் நம்பரை பார்த்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு கோகிலாவின் சான்றிதழ்கள் பஸ்சில் கேட்பாரற்று கிடந்ததாகவும், அது தன்னிடம் இருப்பதாகவும் கூறி ரூ. 15 ஆயிரம் பணம் கேட்டு அடிக்கடி போன் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அதனை நம்பி அவரிடம் வங்கி சேமிப்புக் கணக்கு எண் கேட்டு தெரிந்து கொண்டு அதற்கு முதலில் ரூ.1,000 அனுப்பினார். இதனைத் தொடர்ந்து துறையூர் எஸ்.பி.ஐ வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்த போது அந்த மர்ம நபர் துறையூர் அருகே நக்கசேலத்தைச் சேர்ந்த வடிவேலுவின் மகன் பாலமுருகன் (40) என்பது தெரிந்தது.
இந்நிலையில் ஒரு கட்டத்தில் கோகிலாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பாலமுருகன், தனியாக வந்து தனிமையிடத்தில் தன்னை சந்தித்தால் சான்றிதழ்களை தருவதாக செல்போனில் கூறியுள்ளார். இதனை கோகிலா தனது கணவரிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் கோகிலா குடும்பத்தினர் பாலமுருகன் போக்கிலே சென்று அவரிடமிருந்து சான்றிதழ் பெற முயற்சித்தனர். தொடர்ந்து பாலமுருகனிடம் பேச்சுக் கொடுத்து அவரை துறையூர் பஸ் நிலையத்துக்கு கோகிலா நேற்று வரவழைத்தார். தன்னுடன் தனது கணவர் பழனி, தாய் ஜோதிமணி, தம்பி ராஜசேகரன் ஆகியோரையும் துணைக்கு அழைத்துச்சென்று பாலமுருகனை பிடித்தார். பின்னர் அவரிடமிருந்த தனது கல்வி சான்றிதழ்கள், ஆவணங்களை வாங்கிக் கொண்ட கோகிலா அவருடைய குடும்பத்தினருடன் சேர்ந்து பாலமுருகனை துறையூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.