ஈரோட்டில் புதிய மேம்பாலம் திறப்பு விழா உட்பட பல்வேறு திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏராளமான அறிவிப்புக்களை வெளியிட்டதுடன் மேம்பாலம் உட்பட சாலைகளுக்கு புதிய பெயர்கள் சூட்டி அறிவிப்பு செய்தார்.
அதன்படி புதிய மேம்பாலத்திற்கு "ஜெ.ஜெ அம்மா மேம்பாலம்" என்றும், ஈரோடு தெப்பக்குளம் வீதி பெயர் மாற்றப்பட்டு புதிய பெயராக இனி கனித மேதை ராமானுஜர் வீதி என்று அழைக்கப்படும் என்றதோடு அடுத்து ஈரோட்டின் பிரதான சாலையான பிரப் சாலையின் பெயர் மாற்றப்படுகிறது. பிரப் சாலை இனி மீனாட்சி சுந்தரனார் சாலை என புதிய பெயருடன் அழைக்கப்படும் என்றார்.
பிரப் சாலையின் பெயரை எடப்பாடி ஏன் மாற்றினார் என்பது தான் இப்போது பிரச்சனைக்கான பொருளாக மாறியுள்ளது என்கிறார்கள் ஈரோடு மக்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஈரோட்டில் வசித்த பாதிரியார் தான் பிரப்.
கல்வி நிலையங்கள், மருத்துவமனை, தேவாலயம் என ஈரோட்டில் பல கட்டமைப்புகளை உருவாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொடுத்தவர் பாதிரியார் பிரப். இவரது நினைவாகவே ஒரு நூற்றாண்டாக ஈரோடு பண்ணீர் செல்வம் பூங்கா முதல் அரசு மருத்துவமனை வரை செல்லும் அந்த சாலை பிரப் சாலை என பெயரிடப்பட்டு மக்களால் அழைக்கப்படுவதோடு மாநகராட்சி ஆவணபதிவேடுகளிலும் உள்ளது.
இந்த சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று எந்த அமைப்புகளும் கோரிக்கை வைக்க வில்லை. ஆனால் பா.ஜ.க., மற்றும் இந்து முன்னனியினர் கோரிக்கையாக இது இருந்தது. இந்த பின்னனியில் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடந்த விழாவில் பிரப் சாலையை மீனாட்சி சுந்தரனார் சாலையாக பெயர் மாற்றினார்.
ஈரோட்டில் கல்விக் சேவையில் முன்னோடியாக திகழ்ந்தவர் மீனாட்சி சுந்தரனார். ஈரோட்டின் ஒரு வீதிக்கு இவர் பெயரை வைப்பதில் யாருக்கும் முரண்பாடு இல்லை. ஆனால் நீண்ட காலமாக இருந்த பிரப் சாலை பெயரை மாற்றியது தான் அதிர்ச்சியாக இருக்கிறது என்கின்றனர் பல்வேறு சமூக நல அமைப்பினர். "பாதிரியார் பிரப் ஈரோடு நகர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். அந்த பெருமையை நினைவு கூறத்தான் அவரின் பெயர் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, பிரப் பெயரை எடுத்து விட்டார். எங்கள் அமைப்புகள் கூடி முடிவெடுப்போம் நிச்சயம் பிரப் பெயரை நீக்க விடமாட்டோம்" என கூறுகிறார்கள் கிருஸ்துவ மத அமைப்பை சேர்ந்தவர்கள்.