காந்தி, நேரு, பெரியார், காமராஜர், அண்ணா, அம்பேத்கர் என தலைவர்கள் பலருக்கும் தமிழகத்தில் சிலை வைத்துள்ளனர். ஆனால், பல இடங்களிலும், அந்தச் சிலைகளைப் பராமரிப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வது, அந்தச் சிலைகளை அந்த நிலையில் பார்க்கும்போதெல்லாம் 'எப்பேர்ப்பட்ட தலைவர் சிலையை இப்படியா கவனிக்காமல் விடுவது?' என அந்தத் தலைவர்களின் அபிமானிகளைப் புலம்ப வைக்கிறது.
இதுவும் ஒரு தலைவர் சிலை சம்பந்தப்பட்ட தொண்டர்களின் ஆதங்கம்தான். அண்ணாவின் பெயரில் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.இ.அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தபோது, உறுப்பினர்கள் எண்ணிக்கை 1.50 கோடி என்றும், ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளர்கள் ஆனபிறகு, 90 நாட்களில் 1.10 கோடி பேர் உறுப்பினராக சேர்ந்தனர் எனவும், அது 2 கோடியாக உயரும் என்றும், அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய நிகழ்ச்சியில் அக்கட்சி பெருமிதப்பட்டது.
அண்ணாவை, தனது அரசியல் ஆசானாக மதித்து வந்ததாலேயே, தான் தொடங்கிய அரசியல் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டினார் எம்.ஜி.ஆர். தான் நடிக்கும் திரைப்படங்களிலும், அண்ணா என்ற வார்த்தையை பாடல்களில் இடம் பெறச்செய்தார். அரசியல் மேடையிலும் 'வாழ்க அண்ணா நாமம்!' என உச்சரித்தே பேச்சை முடிப்பார்.
எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான உடன் பிறப்புகள் இத்தனை கோடி பேர் இருந்தும், அவரது அரசியல் ஆசான், கட்சியின் பெயரிலேயே உள்ள அண்ணாவை, அதுவும் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய இந்தக் காலக்கட்டத்தில், எந்த அளவுக்கு மதிக்க வேண்டும்; கொண்டாடியிருக்க வேண்டும்? இதை ஏனோ செய்வதில்லை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லில், பலரும் கடந்து செல்லும் பிரதான சாலையில் அண்ணா சிலை உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின்போது, அந்தச் சிலைக்கு மாலைகூட போடுவார்கள். ஆனால், பராமரிப்பு என்பதே இல்லை. சிலையில் அண்ணா அணிந்திருக்கும் வேட்டி, சட்டை, மேல் துண்டு என அனைத்தும் பல ஆண்டுகளாகக் கறை படிந்த நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் இவ்வளவு அழுக்கான அண்ணா சிலை எங்காவது உள்ளதா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆரோ, அந்தச் சிலைக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் பேனரில் பளீர் வெள்ளை உடையில் சிரிக்கிறார். இத்தனைக்கும் இந்த ஊரில்தான் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குடியிருக்கிறார்.
'அதிமுக நிர்வாகிகள், எதற்கெல்லாமோ ஆடம்பரமாக செலவழிக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் மினிஸ்டர் ஒயிட்டில் ஜொலிக்கிறார்கள். ஆனால், அண்ணா சிலைக்கு பெயின்ட் அடிப்பதற்குத்தான் யாருக்கும் மனம் இல்லை. இந்த வழியாகத்தான் அமைச்சர் போகிறார். அண்ணா சிலை ஏனோ அவர் கண்ணில் படவில்லை' என்று புலம்புகிறார்கள், அந்தச் சிலையைக் கடந்து செல்பவர்கள்.