நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி (25.11.2024) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று (03.12.2024) போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி.க்களும் பங்கேற்றனர். இதனையடுத்து அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவையில் பேசுகையில், “ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், தமிழகத்தில் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ததால், வெள்ளம் சூழ்ந்து, பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விளைந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்க வேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.