திருப்பத்தூர் மாவட்டம், காக்கணாம்பாளையம் ஊராட்சி சிங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுநர் சாமிக்கண்ணு. இவரது மனைவி 27 வயதான கோமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவர் பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை காக்கணாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டார். காலை அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சையில் மருத்துவரீதியாக தவறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆபத்தான நிலைக்கு கோமதியின் உடல் மாறியது. உடனே மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வந்தவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு கோமதியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கோமதி இறந்த செய்தி அறிந்த அவர்களின் உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தவறு செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இறந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்து முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து போராட்டத்தை கைவிட செய்தனர்.
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மனோன்மணியிடம் மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.