விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி கீர்த்தனா. இவர் திருநாவலூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர் கையிலிருந்து 14 ஆயிரம் பணம், கால் கொலுசு மற்றும் ஒரு பவுன் சங்கிலி ஆகியவற்றை வழியில் எங்கேயோ தவறவிட்டுள்ளார்.
இது குறித்து அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேசமயம், திருநாவலூர் கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைச் செல்ல அதே கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் கோவிந்தராஜ் வந்துள்ளார். அப்போது, திருநாவலூர் பேருந்துநிலையத்தின் அருகில் இருந்த ஆஞ்சநேயர் சிலை அருகே கிடந்த 14 ஆயிரம் பணம், கால் கொலுசு மற்றும் ஒரு பவுன் சங்கிலியை கண்டுள்ளார். உடனடியாக அதை எடுத்த அவர் அருகில் இருக்கும் திருநாவலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதன்பின், ஏற்கனவே புகார் அளித்திருந்த கீர்த்தனாவை காவல்நிலையத்திற்கு அழைத்த காவல்துறையினர். பணம் மற்றும் நகை அவருடையது தானா? என உறுதி செய்துகொண்டு, பணம் மற்றும் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த கோவிந்தராஜிடம் கொடுத்து காவல்நிலையத்திலேயே தினேஷ் கீர்த்தனா தம்பதியிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.