கவரிங் நகை மீது தங்க முலாம் பூசி பின்னர், அதை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 12 தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்து, சொகுசு காரில் வலம் வந்த தம்பதியில் கணவனை கொற்றியோடு காவல்துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த மனைவி ஜூன் 22- ஆம் தேதி நாகா்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நாகா்கோவில் செட்டிக்குளத்தைச் சோ்ந்த ஜேசுராஜா (வயது 47) தனது முதல் மனைவியான மீனாவை விவாகரத்து செய்துவிட்டு மார்த்தாண்டம் கழுவன்திட்டையைச் சேர்ந்த அனுஷாவை இரண்டாவது திருமணம் செய்தார். இந்த நிலையில்,இருவரும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு கவரிங் நகைகளை வாங்கி அதில் தங்க முலாம் பூசி பின்னர் அதை தங்க நகை போன்று நிதிநிறுவனங்களில் அடகு வைத்துள்ளனர்.
அனுஷா கூலிங் கிளாஸ் போட்டு டிப்டாப் உடையணிந்து கொண்டு நகையை அடகு வைப்பதற்கு முன் அந்த பகுதியில் உள்ள ஓரு முகவரியை சொல்லி அங்கு வாடகைக்கு இருப்பது போல் கூறி அதன்பிறகு கையில் போட்டியிருக்கும் வளையலை கழற்றி அடகு வைக்க கொடுப்பார். இதற்காக தனது உண்மையான ஆதார் கார்டையும் பயன்படுத்தி வந்தார். நிதி நிறுவனத்தினரும், வாடகை பார்ட்டி என கருதி எந்த விசாரணையும் இல்லாமல் பணம் கொடுத்து வந்தனர்.
இப்படி அவர், திங்கள் சந்தை, கருங்கல், தேங்காப்பட்டணம், பைங்குளம், நாகர்கோவில், தக்கலை, அஞ்சுகிராமம் போன்ற பகுதிகளில் போலி நகைகளை அடகு வைத்திருக்கிறார். அவள் அடகு வைத்த போலி நகைகள் எல்லாமே 2 பவுன் எடை கொண்டதாகவே தான் இருக்கும்.
இந்த நிலையில், தான் சித்திரங்கோட்டில் இதே போல் ஓரு நிதிநிறுவனத்தில் 2 பவுன் நகையென கூறி காப்பு ஓன்றை அடகு வைத்து பணத்தை வாங்கி கொண்டு சற்று தொலைவில் நிறுத்தியிருந்த சொகுசு கார் ஓன்றில் ஏறி சென்றார். இதைப் பாா்த்த அந்த நிதிநிறுவன உரிமையாளருக்கு சந்தேகம் வரவே அந்த காப்பை அவர் வெட்டி பார்த்த போது அது முழுவதும் செம்பாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, கொற்றியோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து கணவர் ஜேசுராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். அனுஷா தலைமறைவானார். இந்த நிலையில் இந்த விசயம் நிதி நிறுவனம் நடத்துபவர்களின் வாட்ஸ் அப் குரூப்பில் அனுஷாவின் புகைப்படத்துடன் தகவல் பரவியது. இதையடுத்து, அந்தந்த நிதிநிறுவனத்தினர் தங்களின் சிசிடிவிவை பார்த்த போது அதே பெண் பலரின் நிறுவனத்தில் வந்து போலி நகையை அடகு வைத்து சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவனத்தினர் காவல் நிலையங்களில் புகாா் கொடுத்தனர். இதையடுத்து தனிப்படை அமைத்து அனுஷாவை தேடி வந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், அவரை தக்கலை மகளிர் சிறையில் அடைத்தனர்.