
திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த திவ்யா என்பவரும் அதே தெருவைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரும் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்பே திவ்யா கர்ப்பமானதால் 8 மாதத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. மேலும், குழந்தை பிறந்ததில் சந்தேகம் உள்ளதாக கூறி வரதட்சணையாக 10 பவுன் வழங்க வேண்டுமென்று திவ்யாவையும், அவரது குடும்பத்தாரையும் கணவர் ஞானசேகரன், மாமனார் சண்முகம், மாமியார் தையல்நாயகி ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.
இதையடுத்து, தனிக்குடித்தனம் நடத்திவந்த திவ்யாவை விட்டுவிட்டு ஞானசேகரன் சென்றுவிட்டார். தற்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு நடைபெறுவதாக திவ்யாவுக்கு தகவல் கிடைத்ததையடுத்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். புகார் மீது காவல்துறையினர் விசாரணை நடத்த காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த திவ்யா நேற்று (02.12.2021) மாலை கோட்டை மகளிர் காவல் நிலையம் முன்பு கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து திவ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து திவ்யா தனது போராட்டத்தைக் கைவிட்டு திரும்பினார். இந்தப் போராட்டத்தால் காரணமாக கோட்டை காவல் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.