கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ளது வலசக்காடு. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 40). இவரது மனைவி சாந்தி கலையரசன் (வயது 39). கலையரசனுக்கும், அவரது தம்பி பாலமுருகனுக்கும் இடையே குடும்ப சொத்து பங்கு பிரிப்பது சம்மந்தமாக பல முறை தகராறு நடந்து வந்துள்ளது. இதுகுறித்து, அவர்களிடம் அவரது உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்களின் சொத்து பிரச்சனை முடிவுக்கு வரவில்லை.
இந்த நிலையில் கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20- ஆம் தேதி அன்று கலையரசனின் மனைவி சாந்தி, அவரது உறவினர்கள் சாமிதுரை, ராமலிங்கம் மற்றும் வேலுமணி ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை உருட்டுக்கட்டையால் கடுமையாகத் தாக்கினர். இதில் பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாலமுருகன் தந்தை கோவிந்தசாமி சோழதரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எனினும், ஜாமீனில் அவர்கள் நால்வரும் வெளியே வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, நேற்று (22/04/2022) நீதிபதி செம்மல் தீர்ப்பு வழங்கினார்.
அவரது தீர்ப்பில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. சாந்தி, சாமிதுரை, ராமலிங்கம், வேலுமணி ஆகிய 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அவர்கள் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.