கோவையில் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் சேர்ந்து வனப்பகுதியில் சாரைப் பாம்பைக் கையில் பிடித்தபடி வீடியோ வெளியிட்ட நிலையில் அவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அண்மையில் சமூக வலைத்தளத்தில் ஆண், பெண் இருவரும் வனப்பகுதியில் சாரைப் பாம்பை கையில் பிடித்தபடி பேசும் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் கையில் பாம்பை பிடித்துக்கொண்டு பேசிய பெண், 'விவசாயியின் தோழனாக இருக்கும் நண்பனான பாம்பை அடித்துக் கொள்ளாதீர்கள்' என விழிப்புணர்வு கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கோவை புளியகுளம் பகுதியில் எட்டுஅடி நீளம் கொண்ட சாரை பாம்பை பிடித்து வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அப்போது நல்லெண்ண அடிப்படையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தான் நாங்கள் வீடியோ வெளியிட்டோம் என அந்த பெண் கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வனத்துறையினர் ஜாமீனில் விடுவித்தனர். இதுபோன்று பாம்பு உள்ளிட்ட உயிரினங்களைப் பிடித்து அதை வைத்து வீடியோ வெளியிடக் கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.