சேலம் அருகே, 30க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்த சின்ன சீரகாபாடியில் உள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி (42). இவருடைய கணவர் பழனிசாமி. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசிக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை, லட்சுமி விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில், பத்து ஆண்டுக்கு முன்பு மேட்டூரைச் சேர்ந்த ரவுடி ரகு என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். ரகுவும் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
ரகு மீது மேட்டூர் மற்றும் வேறு சில காவல்நிலையங்களில் 5 கொலை உள்பட 33 குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. அண்மையில், அதியமான்கோட்டையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு உள்ளது. கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றங்களில் பெரும்பாலும் ஈடுபட்டு வந்துள்ளார். மேட்டூரில் காவல்துறையினரின் பிடி இறுகியதை அடுத்து, கோபிசெட்டிப்பாளையத்திற்கு தன்னுடைய ஜாகையை மாற்றிக்கொண்டு, அங்கிருந்தே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். ரகு மீது காவல்நிலையத்தில் ஹிஸ்டரி ஷீட் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் ரகுவை தேடி வந்ததால் அவர் தனது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். தனியாகச் சென்றால் யாரும் வீடு வாடகைக்கு தருவதில்லை என்பதால் எங்கு சென்றாலும் லட்சுமியையும் அழைத்துச் செல்வது தெரிய வந்துள்ளது. கடந்த 6 மாத்திற்கு முன்புதான் ரகுவும், லட்சுமியும் சின்ன சீரகாபாடி சமத்துவபுரத்தில் குடித்தனம் வந்துள்ளனர். சமத்துவபுரத்திற்கு வந்த பிறகு காவல்துறைக்கு பயந்து கொண்டு பெரும்பாலும் ரகு வீட்டிற்கு வருவதைத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் லட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஜூன் 20ம் தேதி லட்சுமியின் மகள் அலைபேசி மூலம் அவரை அழைத்துள்ளார். ஆனால் லட்சுமி அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மகள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வீட்டிற்குச் சென்று தனது தாயாரை பேசும்படி சொல்லச் சொல்லியுள்ளார். அதன்படி உறவினர்கள் வந்து பார்த்தபோது வீட்டிற்குள் லட்சுமி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்பி சிவக்குமார், டிஎஸ்பி அம்லா அட்வின் மற்றும் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். கொலையாளிகள் லட்சுமியை சித்திரவதை செய்தும், அவருடைய தலைமுடியை அறுத்தும், கத்தியால் அவரது கை, கால் என உடலின் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூரமாக கத்தியால் கத்திய காயங்கள் இருப்பது தெரிய வந்தது. ரவுடி ரகு தனது கூட்டாளிகளுடன் வந்து லட்சுமியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடைசியாக ரகு ஜூன் 19ம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார். அன்றுதான் கொலை நடந்திருக்க வேண்டும் என யூகிக்கப்படுகிறது.
லட்சுமி வேறு ஒரு இளைஞருடன் புதிதாக பழகி வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை நடந்ததா?, சொத்துக்காக கொல்லப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமி புதிதாக தொடர்பில் உள்ள இளைஞரை பிடித்து விசாரித்தபோது, இருவருக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்ததை அவரும் ஒப்புக்கொண்டதோடு, இந்தக் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். கொலையுண்ட லட்சுமி பெயரில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ரவுடி ரகு, யாரையாவது மிரட்டி அந்த சொத்துகளை லட்சுமி பெயரில் பதிவு செய்திருக்கலாம் என்றும், அவற்றை மீண்டும் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரும்படி கேட்டபோது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள ரவுடி ரகுவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சின்ன சீரகாபாடி சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.