சென்னை சூளைமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூளைமேடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு இருவர் வந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாகவும் போலீசாரை பார்த்தவுடன் இறங்கித் தள்ளிக்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் பிடித்து மது அருந்தி இருக்கிறார்களா என்று சோதனை செய்யும் கருவியை வைத்து அவர்களை ஊதச் சொல்லியுள்ளனர். ஆனால் அதனை செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் அந்த இருவரில் ஒருவர் தனது மனைவிக்கு ஃபோன் செய்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்திருக்கிறார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி, எப்படி என் கணவரை நிறுத்தியுள்ளீர்கள் என்று உதவி ஆய்வாளர் யோஜிதாஸுடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
“மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தால்தான் தவறு. அபராதம் போடலாம். தள்ளிட்டு வந்தா தப்பில்ல” என்று உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசிய அந்த பெண், “போலீஸ்காரங்க எல்லாம் ஃப்ராடுதான். நீங்க எங்கள சொல்றீங்களா. ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க” என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதையடுத்து உதவி ஆய்வாளர், “நாளை காலையில் போலீஸ் ஸ்டேஷன் வந்து வாகனத்தை எடுத்துக்கோங்க” என்று கூற, உடனே அந்த பெண், “காலையில வரும்போது எம்.பிய கூட்டிட்டு வரவா இல்ல எம்.எல்.ஏவ கூட்டிட்டு வரவா” என்று கேட்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மூவரையும் விசாரித்ததில் இருவரில் ஒருவர் சூளைமேடு சக்தி நகரைச் சேர்ந்த சத்யராஜ்(32) என்பதும் மற்றொருவர் அவரது நண்பர் வினோத் குமார்(32) என்பதும் தெரிய வந்தது. மேலும் போலீசாரை ஆபாசமாகப் பேசி தாக்குதல் நடத்திய பெண் சத்யராஜின் மனைவி அக்ஷயா என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவர் மீதும் கொலை மிரட்டல், போலீசாரை ஆபாசமாகப் பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.