வேலூரில் உள்ள பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பேருந்து பயணிகளிடமிருந்து நகை மற்றும் பணம் திருடு போகும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வந்த தொடர் புகாரை அடுத்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பயணிகளிடம் பணம் மற்றும் நகை பறிப்பில் ஈடுபடுபவர்களைக் காவல் துறையினர் தேடி வந்தனர்.
அந்த வகையில் புகார் அளித்தவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பெண் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தேடி வந்த சூழலில் வேலூர் வடக்கு காவல் துறையினர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர்.
அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்பதும், காவல் துறையினர் தேடி வந்த நபர் இவர் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் கைதான பாரதி, பேருந்தில் ஏறி சக பயணிகளோடு பயணியாக பயணிப்பது போல் நடித்து அவர்களிடம் பேச்சு கொடுத்து நகை மற்றும் பணத்தை திருடிக்கொண்டு எஸ்கேப்பாகி விடுவேன் தெரிவித்துள்ளார்.
நகை, பணம் லம்பாக சேர்ந்ததும் சித்தூர்க்கு சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார். இவர் மட்டும் தனியாக செய்ய வாய்ப்பில்லை. இவருக்கு வேறு யாரேனும் தொழிலுக்கு உதவலாம், கூட்டாளியாக இருக்கலாம் என்பதால் இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.