கரூர் மாவட்டம் குளித்தலைக்கு அருகே அமைந்துள்ளது கடவூர் ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது கன்னியம்மாள். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கும் இடையே ஒருசில மன சங்கடங்கள் இருந்துள்ளது. இதையடுத்து, கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளை முத்துசாமிக்கு 2வது திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதில், முத்துசாமி - வெள்ளையம்மாள் தம்பதிக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். தற்போது, அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதற்கிடையில், முத்துச்சாமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து, 65 வயதான கன்னியம்மாள் வயது முதிர்வின் காரணமாக தங்கை வெள்ளையம்மாளுடன் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார்.
இத்தகைய சூழலில், கடந்த 19 ஆம் தேதியன்று கன்னியம்மாள் தனது தோட்டத்தில் வேப்பங்கொட்டை பொறுக்க சென்றுள்ளார். ஆனால், மாலை நேரத்தில் சென்றவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை. அப்போது, அவரது உறவினர்கள் கன்னியம்மாளை தேடி சென்றபோது வீட்டுக்கு அருகாமையில் உள்ள தோட்டத்தில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். ஒருகணம், இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்களும் ஒன்றுகூடினர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் மூதாட்டி கன்னியம்மாள் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் எதற்காக கொல்லப்பட்டார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் கன்னியம்மாளின் பக்கத்து வீட்டில் இருக்கும் கண்ணன் - முருகாயி தம்பதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டார். அப்போது, போலீசார் விசாரணைக்கு வந்தபோது முருகாயி மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டுள்ளார். இதனால் போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, முருகாயியிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர் சொன்ன தகவல்கள் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது. அதில், ஒருசுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக, கன்னியம்மாளிடம் இருந்த தங்க சங்கிலியை முருகாயி வாங்கியுள்ளார். ஆனால், அந்த சங்கிலியை திருப்பிக் கொடுக்காமல் வங்கியில் அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, கன்னியம்மாள் அந்த தங்கசங்கலியை பலமுறை கேட்டு வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த முருகாயி, கன்னியம்மாளை கொலை செய்ய முடிவு செய்தார். அதில், சம்பவத்தன்று கன்னியம்மாள் தரிசு காட்டுக்குள் தனியாக சென்றிருக்கிறார். அப்போது, அவரை பின்தொடர்ந்த முருகாயி, அவரை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, முருகாயியை கைது செய்த போலீசார், அவரது பீரோவில் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி, முருகாயி மீது கொலை வழக்குபதிவு செய்து அவரை குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே நேரம், இரண்டு பவுன் தங்க நகைக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.