தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (28/08/2021), மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ், விசிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "வேல்முருகன், ஜவாஹிருல்லாவின் கோரிக்கையினை ஏற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது. இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இனி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் எனக் கூற வேண்டாம்; இலங்கைத் தமிழர்களுக்கு நாம் இருப்போம்" என்றார்.
சட்டப்பேரவையில் பேசிய தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், "அதிமுக ஆட்சியில் தரமற்ற கறவை மாடுகள், ஆடுகள் வழங்கி பல முறைகேடுகளை செய்துள்ளனர். திட்டத்துக்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா சென்று கறவை மாடுகளை வாங்கியுள்ளனர். பயனாளிகளை அழைத்துச் சென்று மாடுகளை வாங்காமல் முறைகேடு செய்துள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.
இதனிடையே, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், "அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம் தொடரும். இலங்கையில் முடக்கிவைக்கப்பட்டுள்ள 63 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை நாட்டு சிறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் யாரும் இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.