ஈரோட்டிற்கு அடுத்தடுத்து வந்த ரயில்களில் ஜன்னலோரம் பயணித்த 3 பெண்களிடம் நகை பறிப்பு சிக்னலில் மெதுவாக சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆனங்கூர் ரயில் நிலையம் பகுதியில் சம்பவத்தன்று இரவு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பெண் கழுத்தில் இருந்த 5 கிராம் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதனையடுத்து வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஜன்னலோரம் பயணம் செய்த 2 பெண்களிடம் தலா 1.5 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தத் துணிகர கொள்ளை பரபரப்பு ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆனங்கூர் பகுதியில் ரயில் மெதுவாக சென்றபோது தண்டவாளம் பகுதியில் பதுங்கி இருந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் செயினைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது. ஆனால் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காண முடியவில்லை.
இது குறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:- 'ஈரோட்டிற்கு அடுத்தடுத்து வந்த ரயில்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி கேமரா பதிவு கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆனங்கூர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைப் பெற்று ஆராய்ந்து வருகிறோம். மேலும் அப்பகுதியில் உள்ள செல்போன் டவருக்கு வந்து சென்ற செல்போன் அழைப்புகளையும் பட்டியலிட்டு விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கைது செய்வோம்.
இது போன்ற சம்பவத்தைத் தடுக்கவும் மர்ம நபர்களைப் பிடிக்கவும் ஈரோடு வழியே வந்து செல்லும் ரயில்களில் இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம்' இவ்வாறு அவர்கள் கூறினர்.