குருவிக்காரர்களான நரிக்குறவர் குழந்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அத்தனை குழந்தைகளும் படிக்க வேண்டும் அதற்கு எங்களுக்கு அரசு பள்ளிக்கூடம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் குருவிக்கார இளைஞர்களும் பொதுமக்களும்.
தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் செயல்பட்டபோது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத் மாநிலத்திலேயே முதன்மையான திட்டமாக செயல்படுத்தினார். அப்போது தான் கீரமங்கலம் நரிக்குறவர் காலனியை அறிவொளி நகர் எனப் பெயர் மாற்றி அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் படிக்க வைத்தார். ஏராளமான குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்தனர். ஆனால் உயர்கல்விக்குப் போகாமல் பாசி, மணி, பலூன் விற்பனை செய்கின்றனர். சுமார் 100 குடும்பங்களிலும் நூற்றுக்கணக்கான பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டில் உள்ளனர்.
இந்நிலையில், நாங்கள் படிக்கவில்லை எங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். அதற்கு எங்களுக்கு ஒரு பள்ளிக்கூடமும் அருகிலேயே அங்கன்வாடியும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அப்பகுதி மக்கள். இந்த கோரிக்கையை அடுத்து புதன் கிழமை அறிவொளி நகருக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சண்முகம், வட்டார கல்வி அலுவலர் கருணாகரன், வட்டாட்சியர் செந்தில்நாயகி ஆகியோர் வந்து மக்களின் கோரிக்கையை கேட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாட்டில் அனைத்து குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுப்படி இந்த அறிவொளி நகர் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் சாலையில் சென்று வரும்போது விபத்துகள் ஏற்படுவதால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயங்குவதாகக் கூறுகிறார்கள். அதனால் தங்கள் பகுதியிலேயே பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை பரிசீலனை செய்து அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப இருக்கிறோம் என்றனர் அதிகாரிகள்.
எங்கள் பகுதி குழந்தைகள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல சாலை போக்குவரத்து அதிகமுள்ளதால் சைக்கிள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றனர் அறிவொளி நகர் மக்கள்.