தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்திக்கையில், 'அரசியலுக்கு வந்தால் நடிகர் விஜய்யை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?' எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், ''நான் அரசியலுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிறது. எனது கொள்கை வேறு; என் வழி தனி வழி. நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம். என் தலைவர் பிரபாகரனை நான் ஏற்றுக் கொண்டதைப் போல் விஜய் ஏற்பாரா? மற்ற அரசியல் கட்சியினர் ஏற்பார்களா? விவசாயத்தை அரசு வேலையாக மாற்றுவேன். அது உங்களுக்கு நகைச்சுவையாகத் தான் இருக்கும். அதை அவர்கள் ஏற்பார்களா? என் பாதை தனி; பயணம் தனி; இலட்சியம் தனி; கொள்கை தனி இதில் மற்றவர்களைக் கூட்டு சேர்த்துக் கொண்டு சண்டையிட மாட்டேன். நான் தனித்துச் சண்டையிடுவேன்.
ஒரு ஆட்சியின் சாதனை என்பது அரசுப் பள்ளி தேர்ச்சியில் அதிகளவிலான மருத்துவர்கள், ஆட்சியர்கள் உருவாவது, பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவம் கிடைக்கிறது என்பதாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்றால் மருத்துவத்திற்கு வந்த சிறு பிள்ளையின் கையை வெட்டி விட்டார்கள். இந்த அளவு தான் உங்கள் சாதனை இருக்கிறது. இதைப் பார்க்காமல் டாஸ்மாக்கில் 45 ஆயிரம் கோடியிலிருந்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டம் தீட்டிக் குடிப்பவர்களை அதிகரிக்கத் தான் செய்கிறீர்கள். இதை எப்படி சாதனை என்று சொல்ல முடியும். குண்டு போட்டுக் கொல்வது மட்டும் இனப்படுகொலை என்று சொல்ல முடியாது. குடிக்க வைத்துக் கொல்வதும் இனப்படுகொலை தான். மதுவை தெருவுக்குத் தெரு திறந்து விட்டுவிட்டு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை எனப் பேசுவது எல்லாமே வெட்டிப் பேச்சு. இங்கு எப்படி இளைஞர் நலன் இருக்க முடியும்.
தமிழகத்திலிருந்து கேரளா கர்நாடகா பகுதிகளுக்கு கனிம வளம் கடத்தப்படுகிறது. அங்கு உள்ள மலைகளை அவர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். இங்கு அழிக்கப்படும் கனிம வளங்களால் கட்டப்படும் கட்டடங்கள் வருங்கால சந்ததியினரின் வீடாக இருக்காது. அவர்களின் சமாதியாகத் தான் இருக்கும். அழிக்கப்படும் ஒவ்வொரு மலைகளிலும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் நாம் அழித்து வருகிறோம். இப்போது நாம் வாங்கும் ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய். இப்போதே பதினைந்து ரூபாய்க்கு நாம் வாங்குகிறோம் என்றால் வருங்கால சந்ததிகள் என்ன விலை கொடுத்து தண்ணீர் வாங்குவார்கள்? ஆயிரம் ரூபாய் கொடுத்தா வாங்குவார்கள்? இதை எப்படி நம் வளர்ச்சி என்று சொல்ல முடியும். தண்ணீர் விற்பவனுக்கு தான் லாபம். தற்போது ஏன் கத்திரிக்காய், தக்காளி காய்கறிகளின் விலை ஏறி உள்ளது. காய்கறிகளை நீங்கள் அண்டை மாநிலங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதால் தான்” என்றார்.