அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 2024 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கச் செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டுள்ளார். அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டில் இருந்து அதானி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்காவின் நீதித்துறையின் (US DOJ) குற்றப்பத்திரிகை அல்லது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (US SEC) சிவில் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை( FCPA) மீறுவதாகக் குற்றம் சாட்டப்படவில்லை.
பத்திர மோசடி சதி, கம்பி மோசடி சதி மற்றும் பத்திர மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள் மீது தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை மற்றும் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (SEC) சிவில் புகார்களில் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.