பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாகத் தமிழகம் வந்துள்ளார். அவரது இந்த பயணத் திட்டத்தின்படி டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை சூலூர் விமான நிலையத்திற்கு இன்று (27.11.2024) வந்து அடைந்தார். அவரை முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், தமிழக காவல் துறை அதிகாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி எனப் பலரும் கோவை விமான நிலையத்தில் வரவேற்றனர். அதன் பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரிக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் மேகமூட்டம் மற்றும் கனமழை காரணமாக நீலகிரிக்குச் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதன் காரணமாக நீலகிரி செல்லும் பாதை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயமுத்தூர் சூலூர் விமான நிலையத்தில் இருந்து காளப்பட்டி சாலை வழியாக அன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி வந்தடைந்து நீலகிரி சென்றடைகிறார். அதன்படி நீலகிரி சென்று இன்று ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (28.11.2024) வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளைச் சந்திக்கிறார்.
நாளை மறுநாள் 29ஆம் தேதி (29.11.2024) நீலகிரியில் உள்ள ராஜ்பவனில் பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுகிறார்.அதன் பிறகு 30ஆம் தேதி திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். மேலும் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலிலும் வழிபாடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.