2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது திருவண்ணாமலை மாட வீதியைச் சுற்றி சிமெண்ட் சாலை அமைத்துத் தரப்படும் என திமுக தெற்கு மா.செவும், வேட்பாளரும், இப்போதைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ. வேலு வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாக மாட வீதியான பேகோபுரத் தெரு, பெரிய தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ. வேலு.
திருவண்ணாமலை நகரத்துக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவில் இருந்து ஒவ்வொரு நாளும் 500க்கும் அதிகமான கார்கள், பேருந்துகளில் பக்தர்கள் வருகின்றனர். வார இறுதி நாட்களில் இதுவே இன்னும் மூன்று மடங்கு அதிகரிக்கிறது. கார்களில் வருபவர்கள் கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்துவார்கள். இப்போது சிமெண்ட் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நகராட்சி சார்பில் நுழைவுவரி, பார்க்கிங் கட்டணம் போன்றவை வாங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் வேலு. அமைச்சரின் உத்தரவையும் மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை நகர்மன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன் உட்பட நகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை, இதற்கு உடந்தையாகவே இருந்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் கட்டணம் வசூலிப்பவர்கள் வெளிமாநில பக்தர்களிடம் கடுமையாகவும், ஒருமையில் பேசியும் கட்டணம் வசூலித்து வந்தனர்.
இதுகுறித்து ஆய்வுப் பணியின்போது அமைச்சரிடம் சிலர் முறையிட்டனர். அதிகாரிகள் மறுத்தபோது, வெளிமாநில வாகனத்தின் ஓட்டுநரிடமிருந்து கட்டண ரசீதை வாங்கிக் காட்டினர். உடனே நகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அங்கேயே அழைத்து கோபமாகச் சத்தம்போட்டவர், கட்டணங்களை இனி வாங்கக்கூடாது மீறி வாங்கினால் புகார் வாங்கி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை கைது செய்யுங்கள் என உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
படங்கள் – எம்.ஆர். விவேகானந்தன்