ஏற்காட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் பொறுப்பேற்பாரா என தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ''நாம் எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த தேர்தலில் வாக்கு சதவீதங்களை மாறி மாறிச் சொல்கிறார்கள். முதலில் ஒன்று சொன்னார்கள். இப்படி மாற்றி மாற்றிச் சொல்லி கடைசியில் 69 சதவிகிதம் என சொல்கிறார்கள். ஏன் இந்த அளவிற்கு குளறுபடி என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆறு மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த உடனே 7:00 மணிக்கு சரியான புள்ளி விவரத்தை சொல்லி விடுவார்கள். இதுதான் வழக்கம். இந்த முறை தான் மூன்று முறை, நான்கு முறை மாற்றி மாற்றி அறிவித்ததை பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுக்க ஸ்ட்ராங் ரூம் என ஒன்று வைத்துள்ளார்கள். பெயரளவில் அது ஸ்ட்ராங் ரூமா என்பதை தேர்தல் ஆணையம் தான் உறுதி செய்ய வேண்டும். நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஸ்ட்ராங் ரூமில் கரண்ட் கட் ஆகி 20 நிமிடம் சிசிடிவி கேமரா செயலிழந்துள்ளது. இது உண்மையிலேயே வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரியில் நாம் தண்ணீர் கேட்பதும், கோடை காலம் வந்தவுடன் தண்ணீர் இல்லை என்று சொல்வதும், பெண்கள் எல்லோரும் குடத்துடன் ரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்வதும் இன்று புதிது கிடையாது. இது ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. டிசம்பர் மாதத்தை நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி என எல்லா இடத்திலும் வெள்ளம். தமிழ்நாட்டில் என்ன நிர்வாகம் இருக்கிறது என்பது தொடர்பாக நான் கேள்வியை வைக்க விரும்புகிறேன். ஒரு பக்கம் அதிகமாக மழை வெள்ளத்தை கடவுள் கொடுக்கிறார். அதனை சேமிக்கும் திறன்; ஒரு நல்ல கட்டமைப்பு; தொலைநோக்கு பார்வை இந்த அரசுக்கு இல்லை. தண்ணீர் வரும் பொழுது அதை கடலில் வீணாக கலந்து விடுகிறார்கள். அதனையடுத்து மூன்று நான்கு மாத காலங்களில் கோடை காலம் வந்து விடுகிறது. அப்பொழுது தண்ணீர் இல்லை என்ற நிலை உருவாகிறது.
கர்நாடகா தண்ணீர் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. கொடுக்கவில்லை என்றால் நாம் கேட்டு பெறத்தான் போகிறோம். ஆனால் ஏன் ஒவ்வொரு வருடமும் அவர்களிடம் போய் கெஞ்சி தண்ணீர் கொடுங்கள், தண்ணீர் கொடுங்கள் என கேட்க வேண்டுமா? என்ன நம்மிடம் ஆட்சி இல்லையா? நிர்வாகத் திறன் உள்ள அதிகாரிகள் இல்லையா? ஆட்சியாளர்கள் இல்லையா? பண பலம் இல்லையா? என்ன இல்லை. ஏன் ஒவ்வொரு முறையும் மழைக்காலம் வரும்பொழுது கடலில் தண்ணீரை கலப்பது, கோடை காலம் வந்தவுடன் தண்ணீர் இல்லை என்பது, கர்நாடகாவிடம் காவிரியில் தண்ணீர் கொடுங்கள் எனக் கேட்பது என இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதே பாணியைத் தான் இவர்கள் ஓட்டப் போகிறார்கள்.
ஏற்காட்டில் நேற்று சுற்றுலா போன பஸ் பாதாளத்தில் விழுந்து ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள். தேமுதிக சார்பில் அறிக்கை கொடுத்திருக்கிறோம். ஏன் இந்த குளறுபடிகள். சம்மர் வந்தால் மலைப் பிரதேசங்களுக்கு செல்வது எல்லாருக்கும் வழக்கம். அப்போது உரிய பாதுகாப்பு தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. மலைப்பகுதிகளில் திறமையான பேருந்து ஓட்டுநர்களை அமைக்க வேண்டும். மதில் சுமர்கள் இரண்டு பக்கமும் ஏற்ற வேண்டும். பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டியது அரசினுடைய கடமை. காவல்துறையின் கடமை. ஏழு உயிர் போய் இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போகிறார்கள்? முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்வாரா? அவர்களுக்கு உரிய சன்மானத்தையும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் தர வேண்டும். இந்த நிகழ்வு இனி எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என எல்லா இடத்திற்கும் தான் மக்கள் போவார்கள். அந்த பாதை சரியாக இருக்கிறதா.. பேருந்து சரியாக இருக்கிறதா... ஓட்டுநர்கள் சரியாக இருக்கிறார்களா? என சோதனை செய்து அனுப்ப வேண்டியது அரசின் கடமை''என்றார்.