‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ஆன்டி இண்டியன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத் தடை விதித்தனர். இதனை எதிர்த்து பெங்களூரில் இருக்கும் ரிவைசிங் கமிட்டிக்குப் படத்தை கொண்டு சென்றார் ஆதம்பாவா. தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏற்புடையதில்லை என்றும், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக சென்சார் குழுவினர் இயங்குவதாகவும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ரிவைசிங் கமிட்டியிடம் விரிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.
படத்தைப் பார்த்த 10 பேர்கள் கொண்ட ரிவைசிங் கமிட்டியினர், “மிகவும் துணிச்சலான பல காட்சிகளை எதார்த்தமாக வைத்திருக்கிறீர்கள். படம் நன்றாக இருக்கிறது. ஆனால், சில விசயங்களை காம்ப்ரமைஸ் பண்ணினால் படத்தை ரிலீஸ் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது” என்று சொன்னார்கள்.
"குறிப்பாக, மத ஒற்றுமையைச் சீர்குலைக்கிற மாதிரி டைட்டில் இருப்பதால் அதனை முதலில் மாற்றுங்கள்; கபாலின்னு ஒரு கேரக்டரைப் பற்றி படத்தில் பேசப்படுகிறது. கபாலின்னா, அது நடிகர் ரஜினியை குறிப்பதாகத் தெரிகிறது. அந்த பெயரை மாற்றுங்கள்” என்பது உள்பட சில விசயங்களை சொன்னது ரிவைசிங் கமிட்டி. இதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, “கபாலிங்கிறது குறிப்பிட்ட எவரையும் குறிப்பிடுவதில்லை. ரஜினிகாந்த்துக்கும் கபாலிக்கும் சம்பந்தமில்லை. அவர் நடிக்கும் கேரக்டர்கள் பெயர்தான் பல படங்களின் தலைப்பாகவே இருந்துள்ளது. அதற்காக அந்த பெயர்களை பயன்படுத்தவே கூடாது எனச் சொல்வது சரி இல்லைதானே?” என்கிற ரீதியில் வாதாடினார்கள்.
அதேபோல, ராஜா என்று ஒரு பெயர் வருகிறது. அது, பாஜகவில் உள்ள ராஜா என்பவரைக் குறிக்கிறது. அதனையும் மாற்றுங்கள் என்றனர். இப்படி தேவையற்ற பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி ரிவைசிங் கமிட்டிப் பேசியது. படத்தை வெளியிடக் கூடாது என்கிற கண்ணோட்டத்தில் ரிவைசிங் கமிட்டி இருப்பதாகத் தெரிந்தது. இதனால் அந்த படத்துக்கு ரிவைசிங் கமிட்டியிலும் சென்சார் கிடைக்கவில்லை.
இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தயாரிப்பாளர். அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு திரைப்படத்தின் மூலம் காட்சிப்படுத்துவது அடிப்படை உரிமை. அந்த வகையில், கமிட்டி தனது தனிப்பட்டப் பார்வையை படத்தின் தயாரிப்பில் திணிக்க முடியாது. கபாலி என்ற பெயரை ஏன் பயன்படுத்தக் கூடாது? ஒரு நடிகரை குறிப்பிடுவதாக சொல்வது என்பது சரி அல்ல. முட்டாள் தனமாக இருக்கிறது. சென்சார் சர்டிஃபிகேட் கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு இரண்டு வாரத்தில் கமிட்டி தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று சொல்லி வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.