Skip to main content

'சீமான் மீதான பாலியல் புகார் தீவிரமானது'- வெளியான முழு தீர்ப்பு விவரம்

Published on 21/02/2025 | Edited on 21/02/2025

 

complaint against Seeman is serious' - full details of the verdict released

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் புகாரளித்திருந்தார். வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் தான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு நடிகை சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து, விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 376 ஆவது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு அளித்த புகாரை, 2012 ஆம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். கடிதத்தின் அடிப்படையில், விசாரணை நடத்தி போலீசார் இந்த வழக்கை முடித்து வைத்துவிட்டனர். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சீமான் அளித்த மனு மீதான வழக்கு கடந்த (17-02-25) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பு வாதத்தையும், விஜயலட்சுமி தரப்பு வாதத்தையும் கேட்டுக்கொண்ட நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில் அவர், ‘விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது’ என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை, 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு விவரம் முழுமையாக வெளியாகி இருக்கிறது. அதில், 'மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுள்ளது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது. எனவே தன்னிச்சையாக திரும்பிப் பெறப் முடியாது. விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியிருப்பது சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி இருக்கிறது. சீமான் மீதான இந்த வழக்கை ஆராய்ந்த பொழுது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை. திரைத்துறை தொடர்பான சிக்கலில் இருந்த அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்துள்ளார். தன்னிடம் இருந்து பெருந்தொகை பெறப்பட்டதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கைப் பொறுத்தவரை சீமான் மீதான புகாரை எளிமையாக விட்டு விட முடியாது. எனவே இந்த வழக்கிலிருந்து சீமானை விடுவிக்க முடியாது' என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சார்ந்த செய்திகள்