கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்த மாணவிக்கு ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் பள்ளியின் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறையினர், பள்ளியின் முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும், வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.