விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.
அதேநேரம் திமுக தலைமையிலான தனது கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே அரவணைத்துக் கொண்டு சென்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவரின் சாதுர்யமான அரசியலால் திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் வரவில்லை. முக்கியமான முடிவுகள் அனைத்தையும் கூட்டணியினரோடு கலந்தாலோசித்து எடுத்து வருகிறார் ஸ்டாலின். இதனால் திமுக கூட்டணி உறுதியாக இருந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து பரப்புரை பணிகளை தொடங்கியுள்ளது.
அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பாஜக-பாமக கூட்டணி, இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இதற்காக இரு கட்சிகளும் கலந்துபேசி பாமக போட்டியிடும் என்றும், பாமகவின் வெற்றிக்கு பாஜக உதவும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அதிமுக-தேமுதிக கூட்டணி,தேர்தலுக்குப் பிறகு முறிந்து விட்டது என்கிறார்கள்.
அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தனது கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் கலந்தாலோசிக்காமலே அதிமுகவினரிடம் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக அறிவித்தார் எடப்பாடி. இந்த முடிவு, தேமுதிக பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயம், தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து, 'இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தன்னிச்சையாக அறவித்தார் பிரேமலதா.
ஆக, 'அதிமுக-தேமுதிக கூட்டணி உறவு, தேனிலவு முடிந்ததும் முறிந்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்திருப்பதால் பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார் பிரேமலதா' என்கிறார்கள் தேமுதிக மாநில நிர்வாகிகள்.