கொடைக்கானலில் 6 வது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ அங்கிருப்போருக்கு அச்சுறுத்தலைத் தந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள வெள்ளைப்பாறை, பெருமாள் மலை உள்ளிட்ட கிட்டத்தட்ட 40 ஏக்கர் வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. ஏற்கனவே மச்சூர் வனப்பகுதியில் எரிந்த காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வெள்ளைப்பாறை பகுதியில் காட்டுத்தீ பரவி எரிந்து வருகிறது. அதேபோல் கூக்கால் கிராமத்தில் உள்ள பழம்புத்தூர் வனப்பகுதியிலும் காட்டுத்தீயின் பரவல் அதிகமாக உள்ளது. கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காட்டுத்தீ பரவுதல் என்பது எளிதில் நிகழக்கூடிய ஒன்றாகிவிட்டது. தீத்தடுப்பு கோடுகள், எதிர்த்தீ அமைத்தும் வனத்துறையினர் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த காட்டுத்தீயால் வனவிலங்குகள் ஊருக்குள் இடப்பெயர்வு செய்வது அதிகரிக்கும் என கொடைக்கானல் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.