திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா சின்னவரிகம் ஊராட்சிக்கு உட்பட்ட பெங்களமூலை என்ற கிராமத்தில் ஆந்திர மாநில காட்டு பகுதியில் இருந்து பெங்கள மூலை காப்புகாடு வழியாக டிசம்பர் 23ந்தேதி நள்ளிரவு ஒரு குட்டி யானை உட்பட 7 காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அங்குள்ள வாழை மரங்களை சூறையாடி சாய்த்துள்ளது.
யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள், ஊருக்குள் வந்துவிடும்மோ என அச்சப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் அங்கு சென்று மக்கள் உதவியுடன் விடிய விடிய யானைகளை காட்டுக்குள் விரட்டி அனுப்பினர்.
காட்டு யானைகளால் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகளான பெருமாள், வெங்கடேசன், பத்மாவதி, தாரணி, முரளி கிருஷ்ணன் ஆகியோரின் சுமார் 10 ஏக்கர் பயிரிடப்பட்டிருந்த அறுவடை செய்து வைத்திருந்த நெல், தக்காளி, கொள்ளு, கத்திரிகாய் ஆகிய பயிர்கள் மற்றும் வாழை, மா மரங்களை மிதித்து சேதப்படுத்தி இருந்தது.
டிசம்பர் 22ந்தேதி மாச்சம்பட்டு கிராமத்தில் புகுந்த 7 யானைகள் கூட்டம் அப்பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலங்களில் பயிர்களை சேதம் செய்திருந்தது. டிசம்பர் 23ந்தேதி இரவு, பெங்கள மூலை பகுதியில் முதல் முறையாக யானைகள் கூட்டம் புகுந்து பயிர்களை சேதம் செய்துள்ளது. கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் யானைகள் இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து பயிர்களை சாப்பிடுவதோடு, நாசம் செய்வதால் இப்பகுதி விவசாயிகள் பகலில் அந்த பக்கம் செல்லவே அச்சப்பட்டு வாழ்கின்றனர்.
தகவல் அறிந்து ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் சம்பவ இடத்திற்கு சென்று யானைகள் பயிர் சேதம் செய்த நிலங்களை பார்வையிட்டு பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். அதோடு, இதுப்பற்றி அரசிடம் பேசிய உரிய நஷ்டஈடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு வந்துள்ளார். வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் வனத்துறையினருடன் சேர்ந்து பாதிப்பு குறித்து கணக்கெடுத்துள்ளனர்.
காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சேதம்மடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.